×

வைரஸின் வில்லன் மிளகு!

“தற்போது நமது பாரம்பரிய மருத்துவ முறைகளையும், உணவுகளையும் மீண்டும் பயன்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். உலகம் முழுவதும் பரவி பல மனித உயிர்களை பலிவாங்கி வருகிற கொரோனா தொற்றினைப் போல மிகவும் மோசமான பல பெருந்தொற்று நோய்களிலிருந்தும் நமது தேசம் இதற்கு முன்னர் மீண்டு வந்திருக்கிறது. இதுபோன்ற பெருந்தொற்றுக் காலத்தில் நோயை தடுப்பதற்கும் அதிலிருந்து நாம் மிக விரைவில் விடுபடவும் உணவும் மருந்தும் ஒருசேர அமைவது மிக முக்கியம். அப்படி ஒரு அற்புதமான மருந்து மற்றும் உணவுப் பொருள்தான் மிளகு.

மிளகு பற்றி பார்ப்பதற்கு முன் சில விஷயங்களை நாம் தெரிந்து கொள்வோம். நாம் பெயரிடும்போது உவமை பிரமாணம் என்று ஒப்பிட்டு பார்த்து பெயரிடுவது வழக்கம். இதுபோன்று பெயரிடும்போது ஒரிஜினலாக இருப்பதைவிட ஒப்பிட்டுப் பார்த்து பெயரிடப்பட்ட பொருட்கள் அதிக முக்கியத்துவம் பெற்று அதிகளவில் பயன்பாட்டில் உள்ளன. இதற்கு உதாரணமாக மிளகாயைக் கூறலாம். இன்று நமது சமையலில் மிளகாய் அல்லது மிளகாய்ப் பொடி இல்லாத சமையல் என்பது கேள்விக்குறியே என்ற நிலை உள்ளது. மிளகாய் என்று பெயரிடக் காரணம் மிளகு போல் காரமாக இருப்பதால்தான் இப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

மிளகாய் உடலில் உள்ள நொதிகளை தூண்டச் செய்து சீரணத்தை மேம்படுத்தும். உணவுக்கு சுவையைக் கொடுக்கும். ஆனால் இதே செயல்களைச் செய்வதோடு
விஷமுறிவு மருந்தாகவும், நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கக்கூடியதாகவும் இருப்பதே மிளகின் தனிச்சிறப்பு. மிளகு உடலில் உள்ள ரத்தக்குழாய்களை சுத்தம் செய்கிறது. நுரையீரலில் சளி சேராமல் தடுக்கிறது. கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. பத்து மிளகு இருந்தால் பகைவர் வீட்டிலும் உணவு உண்ணலாம் என்கிற பழமொழி மூலம் அதன் சிறப்பினை நாம் அறியலாம்.

Piper nigrum என்ற தாவரவியல் பெயர் கொண்ட மிளகு படர்கொடி வகையைச் சேர்ந்தது. இதன் இலை அமைப்பு வெற்றிலையின் அமைப்பைப் போலிருக்கும். Piper என்ற சொல் திப்பிலி என்ற மூலிகையின் ஆங்கிலச் சொல்லின் Pepper என்ற சொல்லில் இருந்து வந்தது. Nigram என்றால் கருப்பு நிறம் என்று பெயர். இதில் இருக்கும் Piperine என்பது மிக முக்கியமான வேதிப் பொருளாக இருந்து செயல்படுகிறது. மிளகினை நிறத்தின் அடிப்படையில் பின்வரும் மூன்று வகைகளாக பிரிக்கிறோம். மிளகின் காய்கள் பச்சை நிறத்தில் இருக்கும். அதை உலர வைத்தால் கிடைப்பதே பச்சை மிளகு என்று அழைக்கப்படுகிறது. பழுத்த மிளகினைப் பறித்து உலர வைத்தால் கிடைப்பதை கருமிளகு அல்லது குறுமிளகு என்று அழைக்கிறோம்.

பழுத்த மிளகின் தோல் பகுதி நீக்கப்பட்டு உலர வைக்கிறபோது கிடைப்பது வெண்மிளகு என்று அழைக்கப்படுகிறது. பழுக்காத மிளகுக் காய்களிலிருந்தும் வெண்மிளகு தயார் செய்யப்படுகிறது. மிளகை பொதுவாக குறுமிளகு, வால் மிளகு என்று இரண்டு வகைகளாக பிரிக்கிறோம். வால் மிளகும் பார்ப்பதற்கு மிளகு போல்தான் இருக்கும். இதனுடன் இணைந்திருக்கும் காம்பு பார்ப்பதற்கு வால் போல இருப்பதால் வால் மிளகு என்று அழைக்கப்படுகிறது. வெள்ளை மிளகு மேற்பூச்சு மருந்துக்கு அதிகளவில் பயன்படுகின்றன. கருமை நிற மிளகுதான் உணவுக்கும், மருந்துக்கும் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை மிளகும், வால் மிளகும் மருந்தாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

உணவு மற்றும் மருந்துக்காக பயன்படுத்தப்படும் குறுமிளகு என்ற கருமைநிற மிளகு உணவாக பயன்படுத்தும்போது சீரண சக்தியை மேம்படுத்தி உடலில் உள்ள விஷத் தன்மையைப் போக்கி நுண்கிருமிகளை அழித்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உணவில் மிளகாய்க்குப் பதிலாக மிளகை சேர்த்துக்கொண்டு வர மேற்சொன்ன பலன்களை நாம் பெறலாம். மிளகை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டுவர இருமல் போகும். மிளகுப் பொடியை பழைய வெல்லத்துடன் கலந்து பயன்படுத்திவர ஜலதோசம் போகும். மிளகுப்பொடியை சூடான சோற்றுடன் சிறிதளவு சுத்தமான பசு நெய் கலந்து சாப்பிட்டுவர சீரண சக்தி மேம்படும். நோய் எதிர்ப்பாற்றல் மேம்படும். 1 வெற்றிலை 10 மிளகு என்ற விகிதத்தில் எடுத்து உண்டுவர விஷம் நீங்கும்.

நுண்கிருமிகள் போகும். உடல்பருமன் குறையும். 20 கிராம் கீழாநெல்லியில் 20 குறுமிளகை கலந்து அரைத்து காலை, மாலை என்று இருவேளை உணவுக்கு முன்
எடுத்துவர கட்டுக்குள் வராத ரத்த சர்க்கரையின் அளவு குறைந்து கட்டுக்குள் வரும். இதில் குறிப்பிடத்தக்கது யாதெனில் நீரிழிவு நோயாளியைதான் தொற்று நோய்கள் அதிகளவில் தாக்குகிறது. எனவே அவர்கள்தான் அதிக தற்காப்பு முயற்சிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். மேற்கண்ட கலவையில் கீழாநெல்லி வைரஸ் கிருமிகளை அழிக்கும் வல்லமை கொண்ட மூலிகை என்று கண்டறிந்துள்ளனர்.

குறுமிளகும் மிகச் சிறந்த கிருமிநாசினி. வால் மிளகு Piper cubeba என்ற தாவரவியல் பெயர் கொண்டது. இது வாயில் தோன்றக்கூடிய நோய்களுக்கும், தொண்டை நோய்களுக்கும் மிகச் சிறந்த மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாய் துர்நாற்றத்திற்கும், தொண்டையில் ஏற்படும் அழற்சிக்கும் இதன் பொடியை தேனுடன் கலந்து பயன்படுத்தலாம்” என்கிறார் மருத்துவர் பாலமுருகன்.    

தொகுப்பு: க.கதிரவன்

Tags : The villain pepper of the virus!
× RELATED இரும்புக் கரம் கொண்டு கட்டுப்படுத்த...