×

பெற்றோர் கவனத்துக்கு ஓர் எச்சரிக்கை

நன்றி குங்குமம் தோழி

குழந்தை இருக்கும் இடத்தில் எந்தப் பொருளையும் போட்டு வைக்கக் கூடாது. தவறி போட்டு வைத்திருந்தால் அதனை சிறு குழந்தைகள் எடுத்து வாய்க்குள் போட்டுக் கொண்டு விடும் என பெரியவர்கள் கூறுவார்கள். அது எவ்வளவு உண்மை என்பதை இந்த சம்பவத்தின் மூலம் நீங்கள் உணரலாம்! பெங்களூரில் 11 மாதங் களே  ஆன ஒரு ஆண் குழந்தை மிக அவசரமாக ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு தூக்கி வரப்பட்டது. அதற்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருந்தது.

சில டெஸ்ட்டுகளுக்கு பின்தான் அந்தக் குழந்தை 5-6 சென்டி மீட்டர் நீளம் கொண்ட, உயிருடன் கூடிய ஒரு மீனை விழுங்கியுள்ளது தெரிந்தது. அவர்கள் வீட்டில் மீன் தொட்டி இருந்துள்ளது. அது குழந்தையின் கைக் கெட்டிய தூரத்தில் இருந்துள்ளது. அதில் நீந்திக் கொண்டிருந்த ஒரு மீனைப் பிடித்து வாய்க்குள் போட்டுக் கொண்டு விட்டது. அதன்பிறகு  உடல்நிலை மோசமாகி  மூன்று நாட்கள் கழித்துதான் குழந்தை பழைய நிலைக்கு மீண்டது.

குழந்தையை ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்தபோது  மூச்சுவிட ரொம்ப கஷ்டப் பட்டது. இதன் மூலம் மூச்சுக் குழாயில் காற்றின் நடமாட்டத்தை ஏதோ தடுக்கிறது என தெரிந்தது.  காற்றுக் குழாயும் வீங்கி இருந்தது. டாக்டர் எண்டோஸ்கோபி செய்து மீனை மூச்சுக் குழாயிலிருந்து வெளியே எடுக்க வேண்டியிருந்தது. குழந்தையோ, சிடுசிடுவென அழுது கொண்டேயிருந்தது. அதனுடைய தொண்டையை  சோதித்தபோது அதனுள் ஏராளமான உமிழ் நீரும், சிறிது ரத்தமும் இருந்தது.

எக்ஸ்ரே எடுத்து கழுத்தின் மென்மையான பகுதியை பார்த்தபோது பெரியதாக தெரியவில்லை.குழந்தைக்கு இன்டியூபேட் (Intubated) மற்றும் வென்டிலேட்டரை பொருத்தி சகஜமாய் மூச்சுவிட ஏற்பாடு செய்தார்கள். என்ன தடுக்கிறது என கண்டுபிடிக்க இயலாததால் ‘பேடியாடிரிக் இன்டென்சிவ் கேர்’ பகுதிக்கு (PICU) குழந்தையை மாற்றினார்கள். அங்கு வயிறு, குடல், மலக்குடல் போன்றவற்றை ஆராய்வதற்கான எண்டோஸ் கோபி எடுக்கப்பட்டது.

அப்போது முழு மீன், வயிற்றின் மேல் பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு மீன் சிறு சிறு பாகமாக வெட்டி வெளியே  எடுக்கப்பட்டது. அங்கங்கு நீர் வீக்கம் (Edema) ஏற்பட்டிருந்தது. ‘‘குழந்தைக்கு வென்டி லேட்டரை தொடர்ந்து, அதே சமயம் குணப் படுத்தும் மருந்துகளை கொடுத்து சகஜ நிலைக்கு கொண்டு வந்தோம். தொடர்ந்து இரண்டு நாள் அவசர சிகிச்சைப் பிரிவில்  வைத்திருந்து, சில சோதனைகளை நடத்தி, குழந்தையின் சகஜ நிலையை பராமரித்து டிஸ்சார்ஜ் செய்தோம்’’  என்கிறார் சிகிச்சை அளித்த டாக்டர்.

சரி, மற்ற குழந்தைகள் இதுவரை இப்படி எது எதை விழுங்கியுள்ளன.

1. 1.5 அங்குல உலோக ஸ்க்ரூ.
2. வேர்க்கடலை.
3. துருப்பிடித்த, விஷத்தன்மை கொண்ட சிறிய பேட்டரி.
4. க்ரீம், வாஷிங் பவுடர் மற்றும் உடைந்த பொம்மைகள் ஆகியவற்றையும் விழுங்கியுள்ளன.

இதைப் படித்த பிறகாவது இது போன்ற பொருட்களை குழந்தைகள் எடுக்காத நிலையில் கண்டிப்பாக வைக்கவும்.

- ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன்,பெங்களூரு.

Tags :
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!