×

குப்பை இல்லா சென்னை

நன்றி குங்குமம் தோழி

துப்புரவு பணியாளர்களுக்கு போதிய ஊதியம் அளிக்காததால் சிலர் வேலையை விட்டு நிற்பதும்  குப்பைகள் தேங்குவதற்கு ஒரு காரணம். மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டினாலும் நாள் தோறும் சென்னையின் பல பகுதிகளில் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. இதை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சி புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் பொது இடங்களில் குப்பை போடுகிறவர்கள் மீது 50 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதில் பொதுமக்கள், சிறு மற்றும் பெரு வணிகர்கள், வியாபாரிகள், நிறுவனங்களின் உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இது பொருந்தும் என்று கூறப்பட்டிருக்கிறது. பொது இடங்களில் நிகழ்ச்சி நடத்துபவர்கள் குப்பை போட்டுச் சென்றால் அவர்களுக்கு அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. குடியிருப்புவாசிகள் தெருக்களில் குப்பை கொட்டினால் 100 ரூபாய் அபராதமும், வணிக வளாக வியாபாரிகளுக்கு 1000 ரூபாயும், உரிமையாளர்களுக்கு 2000 ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்பட உள்ளது.

இது மட்டுமல்லாமல் பொது இடங்களில் எச்சில் துப்புவது, சிறுநீர் கழித்தல் போன்ற குற்றங்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை தொடர்ந்து இது நாள் வரை  தூங்கிக் கொண்டிருந்த மாநகராட்சி அதிகாரிகள் தற்போது தீவிர கண்காணிப்பில் இறங்கியிருக்கிறார்கள் என்ற தகவலும் வந்துள்ளது. எதுவாயினும் நாம் இருக்கும் பகுதியை தூய்மையாக வைத்திருப்பது என்பது நம்மையும் நம் குடும்பத்தைச் சார்ந்தவர்களையும் ஆரோக்கியமாக  வைத்துக்கொள்ள உதவும். குப்பைகளை தரம் பிரித்து பாதுகாப்பாக குப்பைத் தொட்டிகளில் போடுவதே நம் தலைமுறைகளுக்கு நாம் கற்றுத் தரும் நற்பண்பு.

Tags :
× RELATED தமிழகத்தின் முதல் பெண் கட்டைக்கூத்து கலைஞர்!