×

உடலுக்கும் உதட்டுக்கும் பீட்ரூட்

நன்றி குங்குமம் தோழி

கிழங்கு வகைகளிலேயே அதிக ஆரோக்கிய நலன் நிறைந்த உணவாக பீட்ரூட் உள்ளது. இது நம் உடம்பின் ரத்த உற்பத்திக்கு மட்டுமே  பயன்தரும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், லிப்ஸ்டிக் என்ற அழகு சாதனப் பொருளாகவும் இது பயன்படுகிறது  என்பது உங்களுக்குத் தெரியுமா?காய்கறிகளிலேயே அதிக இனிப்புச் சுவை கொண்டது பீட்ரூட். ‘பீட்’ என்னும் செடியின் வளர்ந்த  வேர்ப்பகுதியையே நாம் ‘பீட்ரூட்’ என்கிறோம். கரும்புக்கு அடுத்தபடியாக இனிப்புக்காக பயன்படுத்தும் சர்க்கரையின் மூலமாக பீட்ரூட்  இருந்திருக்கிறது.

இதன் இலை களையும் ஆதிகாலத்தில் சமையலுக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள். இதை முதலில் உணவுக்காக  பயன்படுத்தியவர்கள் ரோமானியர்கள். ரோமானிய நாடோடிகள் மூலமாக வடஐரோப்பாவுக்கு இது உணவுக்காக பயிரிடப்பட்டது. 19-ம் நூற்றாண்டில் பீட்ரூட்டிலிருந்து சர்க்கரையை பிரித்தெடுக்கும் தொழிற் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது. ஐரோப்பியர்களின் வருகைக்குப்  பிறகே இந்தியாவில்  பீட்ரூட் பயிரிடப்பட்டது.

இதில் உள்ள இனிப்புச் சுவைக்காக குழந்தைகளும் இதை விரும்பி உண்பார்கள். இதை பச்சையாகவும் சாப்பிடலாம். அதனுடைய பலன்  முழுமையாக நமக்கு கிடைக்கும். இதனுடைய சத்துக்கள் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. நமது உடலில் ரத்த சிவப்  பணுக்கள் உற்பத்தியாக அதிக துணை புரிவது பீட்ரூட்டேயாகும். மேலும் இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் புற்றுநோய்க்கு எதிராக  போராட உதவுவதாகச் சொல்கிறார்கள். பொதுவாக சிவப்பு நிறத்தில் காணப்படும் பீட்ரூட் அரிதாக மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்திலும்  காணப்படுகிறது.

100 கிராம் பீட்ரூட்டில் உள்ள சத்துக்கள்

தண்ணீர்- 87.7 விழுக்காடு, புரோட்டீன் - 17 விழுக்காடு, கொழுப்பு - 0.1 விழுக்காடு, தாதுக்கள் - 0.8 விழுக்காடு, நார்ச்சத்து - 0.9  விழுக்காடு, கார்போஹைட்ரேட் - 8.8 விழுக்காடு உள்ளது. மற்றும் கால்சியம் - 18 மில்லி கிராம், பாஸ்பரஸ் - 5.5 மில்லி கிராம், இரும்பு  - 10 மில்லி கிராம்,  வைட்டமின் சி - 10 மில்லி கிராம், வைட்டமின் ஏ மற்றும் பி-1, பி-2, பி-6, நியாசின், வைட்டமின் பி  ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், சல்பர், குளோரின், அயோடின், காப்பர் போன்ற சத்துக்களும் உள்ளன.இப்படி தலை முதல் பாதம்  வரை நமது உடம்பின் அனைத்து உறுப்புகளுக்கும் பயன்தரும் பீட்ரூட் நமது உதட்டுக்கும் நன்மை செய்கிறது என்றால் நம்புவீர்களா? ஆம்!  உதட்டுச் சாயம் என்கிற லிப்ஸ்டிக் செய்ய இது பயன்படுகிறது. அதன் செய்முறையை பார்ப்போமா..?

பீட்ரூட் லிப்ஸ்டிக் செய்முறை...

ஒரு கிளாஸில் முழுவதுமாக பீட்ரூட் சாறு எடுத்துக்கொள்ளவும். அதில் கால் பங்கு அளவு தேங்காய் எண்ணெயையும், தேன் மெழுகையும்  சேர்த்து ஒரு சிறிய ஸ்பூனால் கலக்க வேண்டும். பின் அந்தக் கலவையை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்    டும். ஓரிரு நாளில் இது  உறைந்துவிடும். பின் தேவைப்படும்பொழுது அதை உங்கள் உதட்டில் லிப்ஸ்டிக்காக போட்டுக் கொள்ளலாம். உதட்டுக்கு நல்ல சிவப்பு  நிறத்தை இது தரும். உங்கள் உதட்டின் கருமை நிறத்தைப் போக்கி ஈரப்பதம் அளிக்கும். இது ஒரு அற்புதமான ஸ்கின் டோனர். புற  ஊதாக்கதிர் தாக்கத்திலிருந்து நம் உதட்டை பாதுகாத்து மினுமினுப்பை தருவதில் மிகச் சிறந்தது. இந்த பீட்ரூட் லிப்ஸ்டிக். இதைப்  பயன்படுத்துவதால் நாளடைவில் நம் உதடுகள் மிக அழகாக மாறிவிடும்.

பொதுவாக கெமிக்கல் கலந்த லிப்ஸ்டிக்கையே இன்றைய டீன் ஏஜ் பெண்கள் விரும்புகிறார்கள். அதனால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பை  அவர்கள் பொருட்படுத்துவதில்லை. காய்கறிகள், பழங்களில் உள்ள நன்மைகளைப் பற்றி அவர்கள் அறிந்துகொள்வதில்லை. ஒரு சிலரே  இந்த வழிமுறையை பயன் படுத்துகிறார்கள். நம் உடலுக்கு பாதிப்பு தராத, கெமிக்கல் கலக்காத இந்த இயற்கையான லிப்ஸ்டிக்கை  பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்!

- எம்.எஸ்.மணியன், சென்னை

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!