×

பெண்களை பாதிக்கும் நோய்கள்!!

நன்றி குங்குமம் தோழி

மினி தொடர்


ப்ரீ மென்சுரல் சிண்ட்ரோம்
(PMS - Premenstrual syndrome)

பெண்களை பாதிக்கும் பிரச்னைகளில் முக்கியமானது. மாதவிடாய் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்து மாதவிடாய் வரும் வரை  சில பெண்களுக்கு அவர்களின் உணர்வுகளில், உடல் ஆரோக்யத்தில் அல்லது குணத்தில் மாறுபாடு ஏற்படும். இதனை தான் ப்ரீ மென்சுரல் சிண்ட்ரோம் என்பார்கள். ஏன் இது ஏற்படுகிறது? இதைத் தவிர்க்க என்ன செய்வது என்பது பற்றியெல்லாம் விவரிக்கிறார்  மருத்துவர் திலோத்தம்மாள்.
 
மாதவிடாய் காலத்திற்கு மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் முன்பிருந்து சில பெண்களிடம் உடல் மற்றும் மன அளவில் பலவிதமான  மாற்றங்கள் ஏற்படும். அதைத்தான் ப்ரீ மென்சுரல் சிண்ட்ரோம் என்கிறோம். மாதவிடாய் துவங்கிய வயதிலிருந்து மெனோபாஸ் வரை  இந்தப் பிரச்னை பல பெண்களுக்கு இருக்கும். 80 சதவிகிதம் பெண்களுக்கு ப்ரீ மென்சுரல் சிண்ட்ரோம் பிரச்னை ஏற்படுகிறது. அதில் ஒரு  சிலருக்கு மட்டும் அது ரொம்ப அதிகபட்சமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

ப்ரீ மென்சுரல் சிண்ட்ரோம் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான சரியான காரணங்கள் இன்னும் தெளிவாகவில்லை. நிறைய காரணங்கள்  உள்ளடங்கி இருக்கலாம். ஆனால்  ஹார்மோன்கள் காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக மாதவிடாய் சுற்றின்  முன்பு ஹார்மோன்களில் ஏற்படும் மாறுபாடுகள் முக்கியக் காரணமாக இருக்கலாம். ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜெஸ்ட்ரோன்  ஹார்மோன்களின் அதீத சுரப்பின் காரணமாக இந்த சிண்ட்ரோம் ஏற்படலாம் என்கிறார்கள்.

இந்தப் பிரச்னை உள்ளவர்கள் மாதவிடாய்க்கு முன்பான நாட்களில் உடலளவிலும் மனதளவிலும் பல மாற்றங்களை சந்திப்பார்கள். மன அழுத்தம், டென்சன், பசியின்மை, தூக்கமின்மை, சோகம், மூட் ஸ்விங், பயம், சோர்வு, மகிழ்ச்சியின்மை, வெறுப்புணர்வு, செக்ஸ்  ஆர்வத்தில் மாற்றம், எரிச்சலுணர்வு போன்றவை ஏற்படலாம். இதெல்லாம் மனதளவிலான சிக்கல்கள்.தலைவலி, மைக்ரேன் தலைவலி,  மூட்டு வலி போன்றவை வரலாம். அலர்ஜி பிரச்னைகள், ஆஸ்துமா பிரச்னைகள் அதிகரிக்கலாம். சிலருக்கு வலிப்பு வரலாம். மலச்சிக்கல்,  வயிற்றுப்போக்கு, முதுகுவலி, உடல்வலி, மார்பகங்கள் கனத்துப் போதல் போன்ற உடலியல் சிக்கல்களும் சிலருக்கு ஏற்படலாம்.

இங்கே குறிப்பிட்ட எல்லாப் பிரச்னைகளும் ஒருவருக்கு வரும் என்று அர்த்தம் இல்லை. இந்தப் பிரச்னையில் ஒன்று அல்லது ஒன்றுக்கு  மேற்பட்ட அறிகுறிகள் சில பெண்களுக்கு ஏற்படலாம். சிலருக்கு இந்தப் பிரச்னை பரம்பரை காரணமாக வரலாம். இவர்களுக்கு ஒவ்வொரு  மாதமும் ஒரே மாதிரியான பிரச்னை வரும் என்று சொல்ல முடியாது. அதே போல் பரம்பரைப் பிரச்னை என்பதால் வீட்டில் இருக்கும் மற்ற  எல்லாப் பெண்களுக்கும் இதே மாதிரி பிரச்னை வரும் என்றும் சொல்ல முடியாது. கர்ப்பமாக இருக்கும்போதும் மெனோபாஸுக்குப் பிறகும்  இந்தப் பிரச்னை வராது. சாதாரண அளவில் இருக்கும் பிஎம்எஸ் பொதுவானது. இது சிலருக்கு பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது.

 மாதவிடாய் துவங்கிய வயதிலிருந்து மெனோபாஸ் காலம் வரை உள்ள பெண்களுக்கு வருகிறது என்றாலும் குறிப்பாக 20களின் கடைசியில் உள்ளவர்களில் இருந்து 40 வயது வரை உள்ளவர்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. குறிப்பாக குழந்தை பெற்ற பின்னர்  பெரும்பாலான  பெண்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. பரம்பரையாக மன அழுத்தப் பிரச்னை உள்ளவர்களுக்கும் அதிகமாக  ஏற்படுகிறது. இதற்கென்ற தனியாக ஆய்வுகள் கிடையாது. ஒவ்வொரு மாதமும்  மாதவிலக்கின் முன் ஏற்படும் இந்த அறிகுறிகளை  வைத்து தான் கண்டறிய முடியும். பிஎம்எஸ் சாதாரண அளவில் உள்ள போது அந்த சமயங்களில் ஏற்படும் சில பிரச்னைகளை கூட முறையான சில பழக்கவழக்கங்களை கையாண்டால் சரிப்படுத்திவிடலாம்.

தீர்வு

*    இந்தப் பிரச்னையைத் தவிர்க்க ஃலைப் ஸ்டைலில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். பி6  விட்டமின் அதிகமுள்ள உணவுகள், விட்டமின் டி சத்துள்ள உணவுகள், கால்சியம், புரதச்சத்து அதிகமுள்ள நல்ல உணவுகள் உட்கொள்ள  வேண்டும்.

*    பொதுவாகவே அதிக சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

*    கொழுப்புச்சத்துக் குறைவான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

*    நிறைய தண்ணீர் அல்லது நீராகாரங்கள் குடிக்க வேண்டும்.

* முறையான உடற்பயிற்சிகளை தினமும் குறைந்த பட்சம் ஒரு மணிநேரமாவது மேற்கொள்ள வேண்டும்.

*    முறையான தூக்கம் அவசியம்.

*    மது பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

*    காபி குடிக்கும் பழக்கத்தை நிறுத்திவிட வேண்டும். சாக்லெட், ஐஸ்கிரீம் போன்றவை அதிகமாக உட்கொள்ளக்கூடாது. உப்பை  அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

*    முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும்.

*    வலி எதிர்ப்பு அழற்சி மருந்துகள் சிலருக்கு உதவும்.

*    இப்படியான பழக்கவழக்கங்களால் சிலருக்கு இந்தப் பிரச்னை சரியாகிவிடும்.

*    இந்தப் பிரச்னை அதிகரிக்கும் போது அதாவது இந்தப் பிரச்னைகள் தினசரி வாழ்க்கையை பாதிக்கும் அளவிற்கு அதிகமாகும்  போது அதனை PMDD Premenstrual dysphoric disorder  என்கிறோம். ப்ரீமென்சுரல் சிண்ட்ரோம் உள்ள பெண்களில் மூன்றிலிருந்து 8 சதவிகிதம் பேருக்கு இந்த PMDD பிரச்னை ஏற்படுகிறது. இதற்கு மருத்துவரிடம் சென்று ஹார்மோன் மாத்திரைகள்  உட்கொள்வது  அவசியம்.

- ஸ்ரீதேவி மோகன்

Tags :
× RELATED லிஸி வெலாஸ்கோவெஸ்