×

Alpha... Beta... Omega... நீங்கள் எந்த வகை பெண்?!

நன்றி குங்குமம் டாக்டர்

உளவியல்


பெண்ணிடம் உள்ள மாறுபட்ட குணநலன்களை வைத்து அவர்களை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள் உளவியலாளர்கள். இவர்களில் ஆல்பா வகைப் பெண்கள் வெற்றியாளர்களாகவும், சமூகத்தில் தனி அந்தஸ்து பெறுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். அதிலும் ஆல்பா வகைப் பெண்ணாக தன்னை மாற்றிக் கொள்வதே சிறப்பானதும் கூட என்று பரிந்துரைக்கிறார்கள். அது என்ன மூன்று வகை... ஆல்பா வகையினருக்கு அப்படி என்ன சிறப்பு ?

மூன்று வகை குணநலன்கள்

தங்கள் தோற்றத்தைப் பற்றிய பாதுகாப்பற்ற பயம் கொண்டவர்கள். தான் மற்றவர்களால் பேணிக்காக்கப்பட வேண்டியவள், தன்னுடைய ஆண் தன்னைச் சுற்றியே இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் பீட்டா வகை பெண்கள்.

சோம்பேறிகளாய், வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் அடையாமல் பிறரைச் சார்ந்து வாழ்பவர்கள் ஒமேகா வகையினர். ஆல்பா வகையான பெண்களோ மற்ற பெண்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு தனித்துவமாக தெரியக்கூடியவர்கள். இவர்களுக்கென்று தனித்துவமான பண்புநலன்களாவும் சிலவற்றைக் குறிப்பிடுகிறார்கள் உளவியலாளர்கள்.

ஆல்பா பெண்கள்

எந்த துறையாக இருந்தாலும் வெற்றிகரமாக இருப்பவர்கள், தலைமைப் பதவி கொண்டவர்கள் எல்லாம் ஆல்பா வகையினர்தான். ஆனால், இவர்களைப் பற்றி தவறான பிம்பம் மற்றவர்களிடம் இருக்கும். அதிகாரத் திமிரோடு மற்றவர்களை அடக்கி ஆள்பவள், சூழ்ச்சியானவள், கர்வம் மிகுந்தவள், அடங்காதவள் என்று ஆல்பா வகைப் பெண்ணை மற்றவர்கள் வர்ணிக்கலாம். ஆனால், உண்மையில் அவர்கள் அப்படி இல்லை என்கிறார்கள் டெக்ஸாஸ் கிறிஸ்டியன் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர்கள்.

வலுவான ஆளுமை, அதீத தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி போன்ற வழக்கத்திற்கு மாறான குணங்களைக் கொண்ட ஆல்பா பெண்கள், உறவுகளில் மட்டுமல்ல அன்றாட வாழ்க்கையில்தான் எதிர்கொள்பவர்களாலும் தவறாக புரிந்துகொள்ளப்படுகிறார்கள். ஆனால், புகழ்பெற்ற பெண் ஆளுமைகள் பலரும் ஆல்பா பெண்களே!

சரி... எப்படி ஆல்பா ஆளுமை கொண்ட பெண்ணாக வளர்த்துக் கொள்வது?

நீங்களும் உளவியலாளர்கள் சொல்லக்கூடிய பின்வரும் சில குணங்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் ஆல்பா பெண்ணாக மிளிர முடியும்.தலைமைப்பண்பு தன்னுடைய சமூக வட்டத்தில் ஒரு மையமாக செயல்படும் ஆல்பா பெண், மக்களை இணைக்க விரும்புகிறாள். ஒரு கூட்டத்தில் முதல் நடவடிக்கையை எடுப்பதற்கு தயக்கமோ, பயமோ ஆல்பா பெண்ணுக்கு இருக்காது. எந்த ஒரு பதற்றமான சூழ்நிலையையும் கையாள்வது மற்றும் தன்னுடைய இனிமையான பேச்சால் அனைவரையும் எளிதில் தன் கட்டுக்குள் கொண்டுவரும் திறமைசாலியான இந்தப் பெண்களை, அவளைச் சுற்றியுள்ள மக்கள் எளிதாக தங்களின் தலைவியாக ஏற்றுக்கொண்டு, அவளது வழிகாட்டுதலை தானாக பின்பற்றத் தொடங்கிவிடுவார்கள்.

தன்னம்பிக்கை

தான் கொண்டுள்ள நம்பிக்கையில் உறுதியாக நிற்பவள். நீதி, நேர்மையில்  வலுவான உணர்வு கொண்டுள்ள ஆல்பா பெண்கள் ஒருபோதும் நீதி தவறாதவர்கள். அநீதியான வார்த்தைகளைக்கூட பேசமாட்டார்கள். தன் உள்மனம் சொல்வதை திடமாக நம்பும் இவர்கள் அதை செயல்படுத்துவதிலும் பின்வாங்க மாட்டார்கள்.

மீள் திறன்

வாழ்க்கை சில நேரங்களில் அதளபாதாளத்தில் தள்ளினாலும், ஒருபோதும் மனம் உடையாதவர்கள் ஆல்பா வகை பெண்கள். வறுமை, நோய், பாலியல் கொடுமை, குடும்ப வாழ்க்கை என எந்த ஒரு சூழலால் பாதிக்கப்பட்டாலும் ஆல்பா பெண்கள் சிலிர்த் தெழுந்து மீண்டுவிடுவார்கள். இவை எல்லாம் ஒரு போதும் அவர்களின் தன்னம்பிக்கையை குலைக்காது.

விசுவாசம்

ஆல்பா பெண்ணின் நம்பிக்கைக் குரியவராவது மிகக்கடினம். அவரது நம்பிக்கையைப் பெற்றுவிட்டால் இறுதிவரை நமக்கு விசுவாசமாக நடந்து கொள்வதோடு, நமக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பார்கள். நன்கு அறிமுகமானவர்களைக்கூட தன்னுடைய நெருங்கிய நட்பு வட்டத்துக்குள் நுழையவிட மாட்டார்கள். நெருக்கமானவர்களையும் தன் சொந்த விஷயத்தில் தலையிட அனுமதிக்கமாட்டார்கள். யாரிடமிருந்தும் சற்று விலகியே இருப்பார்கள். இதனாலேயே இவர்களுக்கு நண்பர்கள் மிகக்குறைவு.

சுய மரியாதை

ஆல்பா பெண்கள் மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதற்காகக்கூட தன் கொள்கைகளை தளர்த்திக் கொள்ள மாட்டார்கள்.  தன்னுடைய கௌவரவம், சுயமரியாதையை தக்க வைத்துக் கொள்வதற்காக யாரையும், எவருடைய எதிர்பார்ப்பையும் ஒதுக்கிவிடுவார்கள். ஒரு போதும் தன் கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். தன்னை அழகுபடுத்திக் கொள்வதிலும் கண்ணியம் காக்கும் இப்பெண்களின் ஆடை அலங்காரம் மற்றவர்கள் மதிக்கும்
விதத்தில்தான் இருக்கும்.

தனித்துவம்

தான் நம்பக்கூடிய, தனக்குப்பிடித்த வாழ்க்கையை வாழ்பவர்கள். தனக்குப்பின்னால் பேசுபவர்களுக்காக தன் நடை, உடை, பாவனைகளை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். அதேபோல மற்றவர்களைப் பின்பற்றியோ, மற்றவருக்காகவோ வாழ்வதையும் விரும்ப மாட்டார்கள்.  தான் என்ன நினைக்கிறார்களோ அதுதான் இறுதி முடிவு.

பிறரை நடத்தும் விதம்

எப்படி தனக்கான சுயமரியாதையை விட்டுக் கொடுக்க மாட்டோர்களோ, அதேபோல மற்ற பெண்களையும் மரியாதையாக நடத்துவார்கள். தனக்குக் கீழ் வேலை செய்யும் பெண்களை மட்டம் தட்டி பேசவோ, மரியாதைக் குறைவாக நடத்தவோ மாட்டார்கள். அலுவலகத்திலோ, தன் வீட்டிலோ,
மற்றும் அக்கம் பக்கத்திலோ உள்ள பெண்களைப்பற்றி தவறாக பேசுவதை விரும்ப மாட்டார்கள்.

வெளிப்படைத்தன்மை

எண்ணம் வேறாகவும், செயல் வேறாகவும் இரண்டு வித முகம் இவர்களுக்கு இருக்காது. எண்ணம், செயல் இரண்டும் ஒன்றுதான். மற்றவர்கள் கவனத்தை தன்பால் ஈர்க்கவும் விரும்ப மாட்டார்கள். அதேபோல் தனக்கு என்ன தேவை? என்ன நினைக்கிறாள் என்பதை வெளிப்
படையாகப் பேசும் முதிர்ச்சியான நடத்தை கொண்டவர்கள் ஆல்பா பெண்கள். அலுவலகம், வியாபாரம் எந்த இடமாக இருந்தாலும் சரிசமமாக நடத்தப்படுவதையே விரும்புவார்கள்.

ஆல்பா பெண் தனக்கும் தன் ஆன்மாவிற்கும் உண்மையாக இருப்பதில் உறுதி கொண்டவள். சர்ச்சைக்கு இடமளிக்கும் சூழலிலோ அல்லது தனக்கு மரியாதைக் குறைவு ஏற்படும் இடத்திலிருந்தோ சட்டென்று வெளியேற தயங்க மாட்டார்கள். சக்திவாய்ந்த, வலுவான, தன்னம்பிக்கை மிக்க மற்றும் சுயமரியாதை கொண்ட பெண்ணாக தோன்றினாலும், கொடூரமானவள் என்று அர்த்தம் இல்லை.

மற்றவர்களைப்பற்றி புறம்பேசி, கொடூரமாக நடந்து கொள்ளும் பெண்ணைப் பார்த்தால் உறுதியாகச் சொல்லலாம் அந்தப் பெண் ஆல்பா பெண் இல்லை என்று. தன் வேலையைத் தானே செய்து கொள்வதையே விரும்பும் இவர்கள் எதற்காகவும் மற்றவர்களைச் சார்ந்து வாழ விரும்ப மாட்டார்கள்.

- இந்துமதி

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!