×

மெல்ல விலகும் திரை

நன்றி குங்குமம் தோழி

சவூதியில் கார் ஓட்டத் தடை நீங்கியது

சவூதி அரேபியாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த மிகப்பெரும் தடை, அதிகாரபூர்வமாய் முடிவிற்கு வந்தது. அங்குள்ள பெண்கள் இனி சுதந்திரமாய் கார் ஓட்டிச் செல்ல முடியும். 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சவூதி மன்னர் சல்மான் பின் அப்துலாஜிஸ்ம் அல்சவுத் பெண்கள் கார் ஓட்டுவதற்காக அந்நாட்டில் இருந்த தடையை ரத்து செய்து உத்தரவை வெளியிட்டார். பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமத்தை சவூதி அரசு வழங்கத் தொடங்கியது. சவூதியின் சாலைகளில் பெண்கள் சுயமாக காரை ஓட்டுவதற்கும் அதிகாரபூர்வமாய் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்கள், சாலைகளில் மிகவும் மகிழ்ச்சியுடன் காரை ஓட்டிச் சென்றதுடன், சவூதி போலீஸாரும், காரை ஓட்டிய பெண்களின் கைகளில் ரோஜா மலர்களைக் கொடுத்து வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். பெண்கள் கார் ஓட்டத் தொடங்கியதுமே, தங்களது புகைப்படங்களையும், வீடியோக்களையும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்களின் மகிழ்ச்சியையும், ஆரவாரத்தையும் தொடர்ந்து வெளிக்காட்டி வருகின்றனர்.

வளைகுடா நாடான சவூதி அரேபியாவில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்து வரும் நிலையில், கார் ஓட்ட அரசு அனுமதி மறுப்பதற்கு, 1990ம் ஆண்டு முதல் தங்களது எதிர்ப்பினை பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தெரிவித்து தொடர்ந்து போராடத் தொடங்கினர். இந்நிலையில் முகமது பின் சல்மான் அந்நாட்டு இளவரசராக பதவியேற்றபின், பெண்களின் கட்டுப்பாட்டில் பல்வேறு மாறுதல்கள் வரத் துவங்கின. குறிப்பாக கேளிக்கை நிகழ்ச்சிகளில் பெண்கள் கலந்து கொள்ளவும், விளையாட்டு போட்டிகளை நேரில் சென்று பார்க்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

தொடர்ந்து 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டது. அரசின் அறிவிப்பு வெளிவந்த நிலையில், கடந்த ஜூன் 5ம் தேதி பத்து பெண்களுக்கு ஓட்டுநர் உரிமத்தை சவூதி அரசு வழங்கியது. தொடர்ந்து பல பெண்கள் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் இணைந்து பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினர். ஏற்கனவே அரசு அறிவித்தபடி, தடை நீங்கிய சில நிமிடங்களிலேயே உரிமம் பெற்ற பெண்கள் கார்களின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து, அதிகாரப்பூர்வமாய் சவூதியின் சாலைகளில் தங்கள் கார்களை ஓட்டத் தொடங்கினர்.

சவூதி பெண்களின் 30 வருட யுத்தம் முடிவுக்கு வந்தது. 2020-ம் ஆண்டுக்குள் 30 லட்சம் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமத்தை வழங்க அந்நாட்டு அரசு  திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து பாதுகாப்பு சோதனைச் சாவடிகள் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட உள்ளன. பெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சி வழங்குவதற்காக 5 நகரங்களில் பயிற்சி நிலையங்களை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஓட்டுநர் பயிற்சியினை முடித்தவர்கள் உரிமத்துக்காக தனியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். பெண்கள் கார் ஓட்ட தடை நீங்கியதன் மூலம், அந்நாட்டின் பொருளாதாரம் 2030க்குள் 9 ஆயிரம் கோடி டாலராக உயரும் என ப்ளூம்பெர்க் சந்தை ஆய்வு நிறுவனம் தனது கருத்தை வெளியிட்டுள்ளது.

சவூதி அரேபியா இளவரசர் அல்-வாலீத் பின் தலால் தனது மகள் கார் ஓட்டும் வீடியோவை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.  பெண் தொழில் அதிபரான சமா அல்கோசைபி என்பவர் கூறும்போது, ‘‘நல்லதொரு எதிர்காலத்துக்கான விடியலுக்கு நாங்கள் சாட்சி ஆக இருக்கிறோம்.  ஒரு தொழிலதிபர் என்ற முறையில் பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கு நான் மனப்பூர்வ நன்றியை தெரிவிக்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.  உணவு வல்லுனரான சாரா அல்வாசியா என்ற பெண் பேசும்போது, “அமெரிக்காவில் 18 ஆண்டுகளுக்கு முன்னர் ஓட்டுனர் உரிமம் பெற்றேன்.

சொந்த நகரத்தில் வாகனம் ஓட்டுவேன் என்று நினைத்துக்கூட நான் பார்த்தது இல்லை, மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.  தொலைக்காட்சி தொகுப்பாளராக பணிபுரியும் சமர் அலமோக்ரென் ரியாத் நகரில் காரை ஓட்டி சென்றார். அவருடன் அவரது நண்பரும் உடன் சென்றார்.  கூடியிருந்த அவரது உறவினர்கள் வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்தனர். சாலையில், ஒரு சில மீட்டர் தூரத்தில் நின்றிருந்த பொது மக்களும்  சமருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பூங்கொத்துக்களை வழங்கி, பெண்கள் கார் ஓட்டுவதற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

சிலர், மகிழ்ச்சியில் சத்தமிட்டு ஆரவாரம் செய்தனர். வழியில் இருந்த போலீசாரும் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். அவர் பேசுகையில், “பெண்கள்  கார் ஓட்டத் தடை முடிவுக்கு வந்தது சவூதி வரலாற்றில் மிகப்பெரிய நிகழ்வாகும். நான் இனி மகிழ்ச்சியாக கார் ஓட்டுவேன்’’ எனக் கூறியுள்ளார். அபுதாபியில் பார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் கார்பந்தயம் நடைபெற்றது. அமலுக்கு வந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க சட்டத்தை குறிக்கும் வகையில், இந்த பந்தயம் தொடங்கும் முன்னர், சவூதி அரேபியா கார்பந்தய அமைப்பின் முதல் பெண் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ள அசீல் அல்-ஹமாத்  பார்முலா ஒன் காரை ஓட்டினார்.

அவர் ஓட்டிய கார் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற அபுதாபி கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில் முதலிடம் பிடித்த கிமி ராய்க்கோனென் பயன்படுத்திய  கார். பெண்கள் காரை தனியாக ஓட்டி செல்ல சவூதி அரசு அனுமதி அளித்திருப்பதன் பின்னான போராட்ட வரலாறொன்று உள்ளது. பெண்களை காரோட்ட அனுமதிக்கவேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ததால் சில‌ பெண்கள் சிறை சென்றுள்ளனர். இஸ்லாமிய நாடான சவூதி அரேபியாவில் ‘ஷரியத்’ சட்டம் கடை பிடிக்கப்படுகிறது.

பெண்கள் கார் ஓட்டினால் அவர்களின் முகத்திரையை நீக்க வேண்டியதிருக்கும், அடிக்கடி வீட்டைவிட்டு வெளியே செல்ல நேரிடும், விபத்து போன்ற  தருணங்களில் வெளி ஆண்களுடன் பேச நேரிடும், ஆண்-பெண் நெருக்கம் ஏற்பட்டு சவூதி பண்பாட்டுக்கு களங்கம் ஏற்படும் என பல்வேறு  காரணங்களைக் கூறி பெண்கள் கார் ஓட்டுவதற்கு உரிமை மறுக்கப்பட்டிருந்தது. அங்கு பெண்கள் எங்கு சென்றாலும், தனியாக ஆண் ஓட்டுநர்களையோ  அல்லது தனியார் வாகனத்தை அமர்த்தியோ செல்ல வேண்டிய நிலைதான் இருந்தது.

இத்தடைக்கு எதிராய் பெண்கள் அமைப்புகள், பெண் உரிமை சங்கங்கள் போராட்டங்களை தொடர்ந்து நடத்தினர். கடந்த 1990ம் ஆண்டில் அரசின்  தடைக்கு எதிராய் வெளிப்படையான போராட்டத்தை பெண்கள் கூடி நிகழ்த்தினர். பிற நாடுகளில் வாங்கிய ஓட்டுநர் உரிமத்துடன் 47 சவூதி பெண்கள் ஊர்வலமாக காரில் சென்று கைதாகினர். போராடிய பெண்களில் சிலர் சிறையிலும் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.  “இனி எங்கள் வீட்டுப் பெண்கள் கார் ஓட்ட மாட்டார்கள்” என அந்தப் பெண்களின் குடும்பத்திலுள்ள ஆண்களிடம் கையெழுத்தை பெற்றுக்கொண்டு சவூதி அரசு அவர்களை விடுவித்தது.

மதவாதிகள் அப்பெண்களை பாலியல்ரீதியாக‌ விமர்சித்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். அப்பெண்கள் தொடர்ந்து கண்காணிப்பிலும் வைக்கப்பட்டனர். அவர்கள் பணியாற்றிய நிறுவனங்கள் அவர்களை பணியிடை நீக்கமும் செய்தன. அவர்களில் இமன் அல் நப்ஜன் என்ற பேராசிரியை பெண்கள் உரிமைக்காகவும் கார் ஓட்ட அனுமதி கேட்டும் ‘சவூதி பெண்கள்’ என்ற தலைப்பில் தனி இணையதளம் நடத்தி வந்தார். 2008ல் ஆயிரம் பெண்கள் கையெழுத்திட்ட மனு மன்னர் அப்துல்லாவிடம் வழங்கப்பட்டது.

லோஜயின் அல் ஹத்வலுவ் என்ற பெண் அபுதாபியிலிருந்து சவூதி எல்லைக்குள் காரை தனியாக ஓட்டி வந்ததற்காக கைது செய்யப்பட்டார். இதற்காக 73 நாள் சிறை வாசம் அனுபவித்தார். அஜிஜா அல் யூசெப் என்ற ஓய்வு பெற்ற கணினி பேராசிரியை நடத்திய பிரசாரம், பொது மக்கள் மத்தியிலும், சர்வதேச அளவிலும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இவரது தொடர் விழிப்புணர்வு பிரசாரம், கார் ஓட்ட தடை நீக்கம், பெண்கள் மீது சவூதி அரசு விதித்த கட்டுப்பாடுகளுக்கு தளர்வு போன்றவற்றைக் கொண்டுவர ஒரு காரணமாக அமைந்தது.

இப்போது தடை நீக்கப்பட்டவுடன், ரியாத் நகரின் முக்கிய சாலைகளில் தங்கள் வீட்டின் சொகுசு காரை நீண்ட நேரம் ஓட்டி மகிழ்ந்த ஹெஸா அல்  அஜாஜி என்ற பெண் கூறுகையில், “மகிழ்ச்சியில், எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. வானத்தில் பறப்பது போன்ற உணர்வு என்னுள்  ஏற்பட்டுள்ளது. தடை நீக்க உத்தரவை மனமார வரவேற்கிறேன்’’ என்றார். லினா அல்மாயினா என்ற மற்றொரு பெண், ‘‘இது விடுதலை கிடைத்தது போன்றதொரு உணர்வை எங்களுக்கு தந்துள்ளது’’ என்றார்.

- மகேஸ்வரி

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!