×

சூறையாடப்படும் விவசாய நிலங்கள் பறிபோகும் வாழ்வாதாரம்

நன்றி குங்குமம் தோழி

மத்திய அரசின் எட்டு வழிச்சாலை திட்டம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் மக்கள் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.  இந்தத் திட்டத்திற்காக நிலத்தை  கையகப்படுத்துவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இதற்காக நிலம் அளவிடும் பணி தொடங்கியது. இதற்கு மக்கள் பெரும் திரளாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். “நிலங்களையும் வளங்களையும் அழித்துவிட்டு எட்டு வழிச்சாலை எதற்கு என்று மக்கள் நீதி கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இத்திட்டம் குறித்தும் நிலம் கையகப்படுத்துதல் குறித்தும் பல உண்மைகளை தெரிவிக்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன்.
“எட்டு வழிச்சாலை திட்டம் மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் வருகிறது. பாரத் மாலா திட்டம் என்பது இந்தியாவில் இருக்கக்கூடிய தொழில்  நிறுவனங்களுக்கு போக்குவரத்து பாதைகளை ஒருங்கிணைக்கும் நோக்கம் கொண்டது. இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா பிரதான சாலைகளையும்,  பிரதான நகரங்களையும் ஒருங்கிணைத்து துறைமுகங்களோடு இணைக்க நினைக்கிறார்கள்.

அதன் பின் சாகர்மாலா திட்டப்படி புதிய துறைமுகங்களை கொண்டு வந்து ஏற்றுமதியை அதிகப்படுத்துவதே இவர்களின் திட்டம். வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்கி ஏற்றுமதி செய்ய வசதியாக சாலை போக்குவரத்து, நீர்வழிப்போக்குவரத்து, வான்வழி போக்குவரத்தை எளிமைப்படுத்த இந்த அரசு திட்டமிட்டுள்ளது. பாரத் மாலா திட்டத்தின்படி சேலம் முதல் உளுந்தூர்பேட்டை வரை மட்டுமே சாலை அமைக்கும் திட்டம் இருந்தது. தமிழக முதல்வர் எடப்பாடி இது குறித்து ஒரு கடிதம் எழுதுகிறார். அதற்கு பிறகுதான் இந்த திட்டம் சேலம் முதல் சென்னை வரை விரிவுபடுத்துகிறார்கள்.

இது கோயம்புத்தூர் முதல் பெங்களூர்வரை விரிவுபடுத்தும் வாய்ப்பும் உள்ளது. இது இந்த திட்டத்தின் பின்னனி. இதற்கு சுமார் 2500 ஹெக்டர் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த போகிறார்கள். இதில் விவசாய நிலங்கள், மக்கள் குடியிருப்பு நிலங்கள்,வனப்பகுதியும் அடங்கும். இந்த வனப்பகுதியில் எவ்வளவு நிலம் கையகப்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை. வனப்பகுதியில் நிலம் கையகப் படுத்துவதற்கு வனப்பகுதியில் நிர்வாகம் இன்னும் அனுமதி கொடுக்கவில்லை. அடுத்து சுற்றுச்சூழல் துறையில் அனுமதி கேட்டுள்ளனர். சுற்றுச்சூழல் துறையில் மத்திய அரசின் கீழ்  ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

அந்தக் குழு இந்தத் திட்டத்தின் காரணமாக சுற்றுச் சூழலுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று ஓர் அறிக்கையை கேட்டுள்ளது. நீர், நிலம், மாசு ஏற்படுதல் குறித்து அறிக்கையை தயார் செய்து. மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். பெரும்பான்மையான மக்கள் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு  தெரிவித்தால் அந்தத் திட்டம் கைவிடப்படவேண்டும் என்று கூறி இருக்கிறது. இதுதான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தில் இருக்கக்கூடிய நடைமுறை. தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கின்றனர். இந்த நிலத்திற்கான இழப்பீடுகள் 2013ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்றனர்.

2013ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டப்படி ஒரு நிலம் கையகப்படுத்தப்படும்போது அந்த மக்களுக்கு எந்த மாதிரியான  பிரச்சனைகள் ஏற்படும் என்று அறிக்கை தயார் செய்து மக்களிடம் பொது கருத்து கேட்க வேண்டும். புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் செய்ய  வேண்டும்.  2013ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தில் பிரிவு 105 ல் இந்த சட்டங்களில் உள்ள அம்சங்கள் பிற சட்டங்களுக்கு செல்லுபடி ஆகாது  என்கிறது. இப்படி இருக்கும்போது நிலம் கையகப்படுத்துவதற்கு ஒரு நடைமுறையும், இழப்பீடு வழங்குவதற்கு வேறு நடைமுறையும் இவர்கள்  பின்பற்றுகிறார்கள்.

இது தவறு என்று நாங்கள் வழக்கு தொடர்ந் துள்ளோம்” என்கிறார் சுந்தர்ராஜன். சூழலியல் செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமன் கூறுகையில்,  “இந்த எட்டுவழிச்சாலை தேவையா என்று அரசுதான் சாத்தியக்கூறு அறிக்கை மூலம் தெரிவிக்க வேண்டும். இந்த அறிக்கையில் 3 மணி நேரத்தில் சென்னையிலிருந்து சேலம் செல்வதால் ஏற்படும் லாபம் என்ன? இந்த மூன்று மணி நேரத்தில் போக்குவரத்து நேரம் குறைவது சாதனை என்றால் மூன்று மணி நேரத்தில் செல்வதற்கு வேறு ஏதாவது எளிமையான வழிகள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

இந்த மாற்றுக்கு எவ்வளவு செலவாகும், எவ்வளவு நிலம் தேவைப்படும், நீரியல் பிரச்சனை என்ன என்பது குறித்தெல்லாம் ஓர் அறிக்கையை அரசு தயார் செய்ய வேண்டும். அந்த அறிக்கை வெளிப்படையானதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் ஒரு பொய் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் கிராம அளவில் பாதிக்கப்பட்டவர்களிடம் ஆலோசனை நடத்தி ஒப்புதல் பெற்றிருக்கிறோம் என்கிறார்கள். அப்படியானால் மக்கள் ஏன் போராட வேண்டும்?

இதை எதையும் செய்யாமல் மத்திய அரசு சொல்வதற்காகவே இந்த திட்டத்தை செயல்படுத்த இந்த அரசு முனைப்பு காட்டிவருகிறது. இதைப் பற்றி  பேசினால் குற்றம், உரிமைக்காக போராடினால் குற்றம் என்கிறார்கள். நான் கருப்புச் சட்டை அணிகிறேனா வெள்ளை சட்டை அணிகிறேனா என்று  கண்காணிக்கிறார்கள். பெரிய அடக்குமுறையை கையாள்கிறார்கள். நாங்கள் கேட்பது முறையாக ஓர் அறிக்கையை தயார் செய்து, அதை மக்களிடம்  சென்று விளக்கி, ஒப்புதல் பெற்று திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான்” என்கிறார் நித்யானந்த் ஜெயராமன்.

- ஜெ.சதீஷ்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!