×

பிஞ்சு நெஞ்சிலே விதையுங்கள்!

நன்றி குங்குமம் தோழி

குழந்தைகளை வளர்க்கும்போது பெரும்பாலான பெற்றோர்கள் பாலின பாகுபாட்டையும் சேர்த்தே வளர்த்தெடுக்கிறார்கள். ஆறு மாத குழந்தையிலிருந்து அவர்கள் உடுத்தும் ஆடைகளில் வேறுபாட்டை காட்ட ஆரம்பிக்கிறார்கள். ஆண் குழந்தைகளுக்கு கால் சட்டையும், பெண் குழந்தைகளுக்கு கவுனும் அணிவித்து அழகு பார்க்கின்றனர். பெண் குழந்தைகள் 2 வயது முதல் மறைவிடத்தில் சிறுநீர் கழிக்க வற்புறுத்தப்படுகிறாள்.

ஆனால் குழந்தைகள் வெளியிலோ பொது இடங்களிலோ சிறுநீர் கழிப்பதை தடுக்கவோ மாற்றவோ இந்த சமூகம் முற்படுவதில்லை. அதனால் பல ஆண் குழந்தைகள் பெரியவர்களான பின்பும் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பதை வழக்கமாக்கிக் கொள்கின்றனர். அதற்காக அவர்கள் வெட்கப்படுவதோ,  வருத்தப்படுவதோ இல்லை. இதுபோன்ற சூழல் சிறுமிகளுக்கோ பெண்களுக்கோ இல்லை. அவர்கள் ஆண்களை போல் வெளியில் சிறுநீர் கழிப்பது பெரும்பாலும் தடைபடுகிறது.

வீட்டிற்கு வந்த பின்னால்தான் சிறுநீர் கழிக்க பழக்கப்படுத்தப்படுகிறார்கள். இப்படி கட்டுப்படுத்தப்படுவதால் நாளடைவில் சிறுநீர் பையின் செயல்திறன்  மங்கிவிடுகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆண் குழந்தைகள் விளையாடுவதற்கு  கார், ரயில்,  துப்பாக்கி போன்றவற்றை வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்கள் பெண் குழந்தைகளுக்கு மரப்பாச்சி பொம்மைகளைத்தான் வாங்கிக் கொடுக்கிறார்கள்.

இந்த நவநாகரிக உலகில் இப்படித்தான் இருபாலருக்குமான வேறுபாடுகள் தொடங்குகிறது. குழந்தைகளுக்கு கட்டாயக் கல்விச் சட்டத்தை 18 வயது வரை அதிகரித்து மேல்நிலைப் படிப்பை அனைவருக்கும் பொதுவானதாக்க வேண்டும். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை பெற்றோர்களுக்கு உணர்த்த வேண்டும். ஆண், பெண் பாகுபாட்டை முற்றிலுமாக களைய வேண்டும்.

வரதட்சணை, பாலியல் சீண்டல், குழந்தை தொழிலாளர் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை வலுப்படுத்திட வேண்டும். இதற்கு உரிய முறையில் அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதற்காக ஒரே பாலின சமத்துவத்தை அளிக்க வேண்டியவர்கள் பெற்றோர்களே. சிறுவர்களுக்கு கிரிக்கெட், டென்னிஸ், ஹாக்கி, ஃபுட்பால் போன்ற விளை யாட்டுகளை கற்றுக்கொடுப்பார்கள்.

சிறுமிகளுக்கு பூப்பந்து, வளைபந்து, எரிபந்து போன்றவற்றையே கற்றுக்கொடுப்பார்கள். அதாவது வலிமையான விளையாட்டுகளை சிறுவர்களுக்கும்,  மென்மையான விளையாட்டுகளை சிறுமிகளுக்கும் கற்றுக்கொடுப்பது பரவலான சமூக பழக்கமாக உள்ளது. இளம் வயதிலிருந்தே இவைகளை மாற்றும்  போதுதான் பின்னாளில் பாலின வேறுபாடுகள் இல்லாத சமூகத்தை கொண்டுவர முடியும். அதற்கு பொறுப்பேற்பவர்கள் பெரும்பாலும் பெற்றோர்களே.

- சுபா, திருவாரூர்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!