×

திருமண முகூர்த்தம் அதிகமுள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கை தளர்த்த வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: திருமண முகூர்த்தங்கள் உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் அலங்காரம், போக்குவர்து போன்றவற்றுக்கு சிறப்பு அனுமதி வழங்கக்கோரி உயர்  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ராம்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. 23.8.20 மற்றும் 30.8.20   ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் 24.8.20  மற்றும்  31.8.20  ஆகிய இரு திங்கட்கிழமைகளிலும் நிறைய திருமணங்கள் நடைபெற உள்ளன. திருமணம் மற்றும் அதனைச் சார்ந்த நிகழ்ச்சிகள் நல்லவிதமாக  நடைபெற ஊரடங்கு தடையாக உள்ளது. நிறைய பேர் ஓட்டலில் சாப்பிட்டு வெளியூரில் வேலை பார்த்து வருகிறார்கள். பலர் தனி வாகனம் கொண்டு  பணியாளர்களை வேலைக்கு அழைக்க இயலாத சிறிய தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்கள்.

எனவே, அரசு ஊழியர்களை சிறப்பு பேருந்துகள் மூலம் பயணிக்க அனுமதிப்பது போல், பொதுப் போக்குவரத்து தொடங்கும் வரை தனியார் நிறுவன  ஊழியர்களுக்கு உரிய அடையாள அட்டை அளித்து அரசுப் பேருந்தில் பயணம் செல்ல அனுமதிக்க வேண்டும்.  அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில்  ஓட்டல் மற்றும் பெட்ரோல் பங்க் திறக்கவும், திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கும், திருமணம் சம்பந்தப்பட்ட நாதஸ்வரம், பூ, சமையல்,  டெக்கரேசன், போட்டோ, வீடியோ, பந்தல், மணமகள் அலங்காரம், வாண வேடிக்கை, போக்குவரத்து போன்ற சேவைப் பணிகளுக்கு சிறப்பு அனுமதி  வழங்க உத்தரவிட  வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு உயர் நீதிமனறத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.


Tags : hearing ,High Court , Wedding Ceremony, Sunday, Curfew, High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...