×

போலி இ-பாஸ் மூலம் பயணிகளை சென்னை அழைத்து சென்ற டிராவல்ஸ் உரிமையாளர், டிரைவர் உள்பட 5 பேர் கைது: வாட்ஸ்அப் விளம்பரத்தால் சிக்கினர்

அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் இருந்து நபர் ஒருவருக்கு ரூ.2000 வாங்கி கொண்டு இ-பாஸ் மூலம் தினசரி சென்னை சென்று வரும்  வசதி உள்ளது என டிராவல்ஸ் நடத்துபவர்கள் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விளம்பரம் வெளியிட்டனர். சரியான காரணங்களுக்கு  மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு வரும் நிலையில் டிராவல்ஸ் நிர்வாகத்தின் இந்த விளம்பரம் குறித்து அதிர்ச்சி அடைந்த கலெக்டர் அன்பழகன்  விசாரணை செய்ய மாவட்ட வருவாய் கோட்டாட்சியருக்கு  உத்தரவிட்டார். இதையடுத்து, டிராவல்சுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட கிராம  நிர்வாக அலுவலரின் உதவியாளர் ஒருவர் சென்னை செல்ல வேண்டும் என கேட்டுள்ளார்.

ரூ.2000 ஆயிரம் பணம் பெற்றுக்கொண்ட டிராவல்ஸ் ஓட்டுநர் இ.பாஸ் இல்லாமல் அவரை சென்னைக்கு அழைத்து செல்ல முயன்றுள்ளார். அப்போது,  இதுதொடர்பாக அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அரவக்குறிச்சி அருகே வாகனத்தை போலீசார் மடக்கி பிடித்தனர்.
அரவக்குறிச்சி காவல் நிலையத்தில்  கோட்டாட்சியர் பாலசுப்பிரமணி, பள்ளப்பட்டி டிராவல்ஸ்  உரிமையாளர் தமீம் (27), கார் டிரைவர் வெங்கடேஷ்  (23) ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

விசாரணையில், பள்ளப்பட்டியில் இருந்து பாலக்காட்டிற்கு இ-பாஸ் பெற்ற இவர்கள் ஒரே இ-பாஸை வைத்துக்கொண்டு பாலக்காட்டிலிருந்து  பள்ளபட்டி, பள்ளபட்டி இருந்து சென்னை என்று பல முறை பயணம் சென்று வந்தது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக அரவக்குறிச்சி போலீசார்  வழக்குப்பதிவு செய்து உரிமையாளர் தமீம், டிரைவர் வெங்கடேஷ் மற்றும் காரில் பயணம் செய்த மூவர் என 5 பேரை  கைது செய்தனர். காரையும்  போலீசார் பறிமுதல்  செய்தனர்.

Tags : owner ,passengers ,Chennai , Fake e-pass, Chennai, Travels owner, driver, 5 arrested, WhatsApp
× RELATED கள்ளக்குறிச்சியில் நின்று...