×

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குறைந்தது மழை: 142 அடியை எட்டுமா பெரியாறு? விவசாயிகள் கவலை

கூடலூர்:  பெரியாறு அணைப்பகுதியில் மழை குறைந்து போனதால், 142 அடி தண்ணீர் தேக்குவது கனவாகி விடுமோ என்ற அச்சம் விவசாயிகளுக்கு  ஏற்பட்டுள்ளது.  கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை தொடர்ந்ததால், பெரியாறு அணையின் நீர்மட்டம் 137 அடியை எட்டியது. தற்போது  மழை குறைந்துள்ளதால், நீர்வரத்து நேற்று வினாடிக்கு 1,101 கனஅடியாக குறைந்துள்ளது. இருப்பினும் தமிழகப்பகுதிக்கு நீர்வரத்தைவிட கூடுதலாக  தண்ணீர் எடுப்பதால், கடந்த இரு நாட்களுக்கு முன் 137 அடிவரை உயர்ந்த நீர்மட்டம் நேற்று 136.40 அடியாக குறைந்துள்ளது. இதனால் இந்த ஆண்டும்  பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்குவது கனவாகி விடுமோ என அச்சம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு முதல்போக விவசாயத்திற்காக வினாடிக்கு 200 கனஅடி தண்ணீரும்,  குடிநீருக்காக 100 கனஅடி தண்ணீரும் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதிகாரிகள் வினாடிக்கு 2,160 கனஅடி தண்ணீர் திறக்கின்றனர். இது  அணையின் நீர்மட்டத்தை 142 உயர்த்தாமல் இருப்பதற்காகத்தானோ என்று அச்சப்படவேண்டி உள்ளது. அணையின் நீர்மட்டம் 142 அடியாக  நிலைநிறுத்த உச்சநீதிமன்ற உத்தரவு இருந்தும், அதற்கான எல்லா வழிமுறைகள் இருந்தும், தமிழக அதிகாரிகளின் மெத்தனத்தால் அணையின்  நீர்மட்டம் குறைக்கப்படுகிறது. இதனால் இந்த ஆண்டும் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்குவது கனவாகிவிடுமோ என அச்சப்படவேண்டி  உள்ளது’’’’ என்றனர்.  

நேற்றைய நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.40 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1101 கன அடியாகவும்,  அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு வினாடிக்கு 2,160 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 6,219 மில்லியன் கன அடியாக  உள்ளது.



Tags : catchment areas , Watershed area, rainfall, Periyar, farmers
× RELATED காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை...