×

வடகிழக்கு பருவமழைக்கு 2 மாதமே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் அரசு கட்டிடங்கள் பலமாக இருக்கிறதா?

குழு ஆய்வு செய்ய அறிவுரை

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள 50 ஆயிரம் அரசு கட்டிடங்களை செயற்பொறியாளர்   தலைமையிலான பொறியாளர்கள் குழுவினர் ேநரில் ஆய்வு செய்து செப்டம்பர் முதல் வாரத்திற்குள் அறிக்ைக சமர்ப்பிக்க பொதுப்பணித்துறை  உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் சிறியதும், பெரியதுமாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு கட்டிடங்கள் உள்ளது.  இந்த கட்டிடங்கள் முறையாக பராமரிக்கப்படாததால் மழை காலங்களில் மழை நீர் ஓழுகுவது, இடிவது, விரிசல் விடுவது போன்ற நிலைமை  ஏற்படலாம். மேலும், அதன் மேற்கூரை பலவீனமாக இருந்தால் மழை காலங்களில் இடிந்து விழவும் வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் தொடங்கவுள்ள நிலையில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள  இந்த கட்டிடங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜாமோகன்  அனைத்து கோட்ட செயற்பொறியாளர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், அவர் கூறியதாவது: பொதுப்பணித்துறை உதவி  செயற்பொறியாளர் கீழ் உள்ள உதவிபொறியாளர், இளநிலை பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் அரசு கட்டிடங்களை  கள ஆய்வு செய்ய வேண்டும். அப்போது, அரசு கட்டிடங்களின் மேற்கூரைகள் வலுவாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

அந்த மேற்கூரையில் தண்ணீர் தேங்குகிறதா, கட்டிடங்களில் மழை நீர் ஒழுகுகிறதா என்றும், கழிவு நீர் குழாய் பாதை அடைப்பு பிரச்னை, மேலும்,  கட்டிடங்களில் மரங்கள் முளைத்துள்ளதா எனபதையும் ஆய்வு செய்ய வேண்டும். அரசு கட்டிடங்கள் மற்றும் வளாகங்களில் மழை பெய்தால் தண்ணீர்  தேங்க வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்தும் சோதிக்க வேண்டும். மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டிடங்களில் மழை நீர்  எளிதாக செல்கிறதா என்பதை பார்க்க வேண்டும். அரசு கட்டிடங்களில் வைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டர் தண்ணீர் தேங்காத உயரத்தில் இருக்கிறதா  என்பதை பார்க்க வேண்டும்.

மின் வயர்கள் செல்லும் வழி, மின் இணைப்பு பாதையில் மழை நீர் செல்ல முடியுமா என்பதை கண்டறிய வேண்டும். செப்டிக் டேங்கில் இருந்து கசிவு  நீரால் கொசு உற்பத்தியாகி உற்பத்தியாகி நோய் ஏற்படுவதை தவிர்க்க சுகாதாரமான முறையில் அரசு கட்டிடங்கள் பராமரிக்கப்படுகிறதா என்பதை  பார்க்க வேண்டும். பல்நோக்கு பேரிடர் பாதுகாப்பு மையத்தில் மழை காலங்களில் பொதுமக்கள் தங்க வேண்டியிருக்கும் சூழல் இருப்பதால், அங்கு  குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி இருக்க வேண்டும். இது தொடர்பான விவரங்களை புகைப்படத்துடன் விரிவான அறிக்கையாக  செப்டம்பர் முதல் வாரத்திற்குள் அனைத்து செயற்பொறியாளர்களும் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,government buildings , Northeast Monsoon,Tamil Nadu,Government Buildings
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...