×

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் பிரச்னை விஸ்வரூபம் 12 மூத்த அமைச்சர்கள் சமரச முயற்சி: எடப்பாடி, ஓபிஎஸ்சை தனித்தனியாக சந்தித்து 4 மணி நேரம் ஆலோசனை

* முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வரிடம் பேசியபோது என்ன கருத்துக்களை கூறினார்கள், முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் என்ன முடிவு  எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஒரு அமைச்சர் கூடவாய் திறந்து பேசமறுத்து விட்டனர்.

சென்னை: முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் அதிமுக அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் மாற்றி மாற்றி கருத்துக்களை தெரிவித்ததால்,  கட்சிக்குள் கடும் மோதல் உருவானது. இரு பிரிவுகளாக பிரிந்து போஸ்டர் அடித்து தங்கள் ஆதரவை தெரிவிக்கும் நிலை உருவாகிவிட்டது. அதைத்  தொடர்ந்து 12 அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வரை ஓ.பன்னீர்செல்வத்தை மாறி மாறி சந்தித்து 4 மணி நேரம் நீண்ட  போராட்டத்துக்குப் பிறகு சமரசப்படுத்தினர். தமிழகத்தில் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும்.

தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ளன. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் தற்போது, தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர். கொரோனா  காலத்திலும் அரசியல் கட்சிகள் தங்களை பொதுமக்களிடம் முன்னிறுத்துவதில் கடுமையாக முயன்று வருகின்றன. ஆனால், அதிமுகவில் முதல்வர்  வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க கடுமையான போட்டி தற்போதே தொடங்கிவிட்டது. அதில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி  பழனிச்சாமி தான் என்று அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பகிரங்கமாக அறிவித்தனர். இதற்கு பல அமைச்சர்கள்  மறைமுகமாக ஆதரவு தெரிவித்தனர். சில அமைச்சர்கள் மட்டும் கட்சி தலைவர்கள் கூடி முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்கள் என்றனர்.

ஆனால், ஒரு அமைச்சர் கூட அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பன்னீர்செல்வம்தான் முதல்வர் வேட்பாளர் என்று கூறவில்லை.  பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான ஆர்.பி.உதயகுமாரே பல்டி அடித்துவிட்டார். இதனால், ஓ.பன்னீர்செல்வம் சில நாட்களாக அதிருப்தியில்  இருந்தார். அவரின் ஆதரவாளர்கள், ஓபிஎஸ்தான் முதல்வர் வேட்பாளர் என்று நோட்டீஸ் அடித்து தேனி மாவட்டம் முழுவதும் ஒட்டிவிட்டனர்.
இந்த நிலையில், நேற்று காலை 8.45 மணிக்கு சென்னை, கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இந்த  நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

விழா முடிந்ததும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் யாரிடமும் பேசிக் கொள்ளாமல் காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். இதனால்,  முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது ஓபிஎஸ் கோபத்தில் உள்ளார் என்பது உறுதியானது. இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மூத்த  அமைச்சர்களை அழைத்து துணை முதல்வர் ஓபிஎஸ் வீட்டுக்கு சென்று அவரை சமரசப்படுத்தும்படி அறிவுரை வழங்கினார். அவரின் உத்தரவின்  பேரில் மூத்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ்,  விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு உள்ளிட்ட 12 அமைச்சர்கள் மற்றும் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி ஆகியோரும் சென்னை,  அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு நேற்று காலை 11.30 மணிக்கு சென்றனர்.

அவர்கள் ஓபிஎஸ்சை சந்தித்து, கட்சியில் கடந்த சில நாட்களாக நடந்த பிரச்னைகள் குறித்து விவாதித்தனர். ஓ.பன்னீர்செல்வமும், கட்சியின்  ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். எந்த அமைச்சர்களும் எனக்கு மரியாதை கொடுப்பதில்லை. தேர்தல் நடைபெற இன்னும் 7 மாதங்கள் உள்ளது.  இப்போது, முதல்வர் வேட்பாளரை அமைச்சர்கள் தன்னிச்சையாக எப்படி பொதுவெளியில் தெரிவிக்கலாம். இன்று எனக்கு ஆதரவாக போஸ்டர்  ஒட்டியதால் என்னிடம் சமசரம் பேச வந்துள்ளீர்கள். கட்சி கட்டுப்பாட்டை அமைச்சர்களே மதிக்கவில்லை என்றால் நிர்வாகிகள், தொண்டர்கள் எப்படி  மதிப்பார்கள் என்று கோபமாக பேசியதாக கூறப்படுகிறது. ஆனாலும், அமைச்சர்கள் ஓபிஎஸ்சிடம் சுமார் ஒன்றரை மணி நேரம் பேசி அவரை  சமாதானப்படுத்தினர்.

இதையடுத்து, முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் கட்சி எப்படி முடிவு செய்ய வேண்டும் என்பது குறித்து சில ஆலோசனைகளை ஓபிஎஸ் சமரசம்  பேச வந்த அமைச்சர்கள் குழுவிடம் தெரிவித்துள்ளார். அதை முதல்வரிடம் தெரிவிக்கும்படியும் கூறினார். சுமார் ஒன்றரை மணி நேர ஆலோசனை  முடிந்தும், செங்கோட்டையன் உள்ளிட்ட 12 அமைச்சர்கள் குழுவினர் அதே கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு  சென்றனர். ஓபிஎஸ் தெரிவித்த கருத்தை அவரிடம் தெரிவித்தனர். இந்த ஆலோசனை சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது. முதல்வர் சில  ஆலோசனைகளை ஓபிஎஸ்சிடம் தெரிவிக்கும்படி கூறி, மீண்டும் ஓபிஎஸ் வீட்டுக்கு அமைச்சர்கள் குழுவை அனுப்பி வைத்தார்.

அதை பொறுமையாக கேட்டுக் கொண்ட ஓபிஎஸ், முதல்வர் எடப்பாடி தெரிவித்த சமரச கருத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று அறிவுரை  வழங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அமைச்சர்கள் குழு மீண்டும் முதல்வர் எடப்பாடி வீட்டுக்கு சென்று ஆலோசனை நடத்தினர். அனைத்து  ஆலோசனைகளும் நேற்று மாலை 3.30 மணியுடன் முடிவுக்கு வந்தது. முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வரிடம் பேசியபோது என்ன  கருத்துக்களை கூறினார்கள், முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஒரு அமைச்சர் கூட வாய் திறந்து  பேச மறுத்து விட்டனர். அதிமுக தலைமை சார்பில் அறிக்கை வெளியிடப்படும் என்ற தகவல் மட்டுமே வெளியானது.

நேற்று காலை 11.30 மணி முதல் 12 அமைச்சர்கள், அவரது உதவியாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் என 25க்கும் மேற்பட்ட கார்களில்  கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் வீடுகளுக்கு அங்கும் இங்கும் பலமுறை அணிவகுத்து சென்றதால் பரபரப்பான சூழ்நிலை  ஏற்பட்டது. கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த அதிமுக உள்கட்சி பிரச்னை நேற்று பூதாகரமாக வெடித்து நடு ரோட்டுக்கு வந்துவிட்டதாக  பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் இந்த பிரச்னையை கேள்விப்பட்டு அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் கிரீன்வேஸ் சாலையில் குவிந்தனர்.  இதனால் கூடுதல் போலீசாரும் போடப்பட்டதால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு காலையில் முதல்வர் விருது
கோட்டையில் நேற்று காலை நடந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில், கருவூல கணக்கு துறைக்கு மாநிலத்தின் நிதி, கருவூலம், மனிதவள  மேலாண்மை மற்றும் ஓய்வூதிய மேலாண்மை ஆகிய பணிகளை கணினிமயமாக்கும் நோக்கோடு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள  மேலாண்மை திட்டத்தை கருத்துருவாக்கியதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதலமைச்சரின் நல் ஆளுமை விருதை முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி நேற்று காலை 9 மணிக்கு வழங்கினார். முதல்வர் கையால் விருது பெற்ற சில மணி நேரத்தில் தான் இவ்வளவு பிரச்னையும்  நடந்தது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்த பிரச்னை
அமைச்சர் செல்லூர் ராஜு கடந்த திங்கட்கிழமை அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த பிரச்னையை மதுரையில் தொடங்கி வைத்தார்.  அதாவது, சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு எம்எல்ஏக்கள் கூடி முதல்வரை தேர்வு செய்வார்கள் என்று அப்போது அவர் கூறினார். இதையடுத்து,  அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுக முதல்வர் வேட்பாளர் என்றனர்.

அமைச்சர் ஜெயக்குமார், கட்சி தலைமை முடிவு எடுக்கும் என்று அறிவித்தார். இப்படி, கடந்த 5 நாட்களாக நடந்த அதிமுக உட்கட்சி மோதல் நேற்று  பூதாகரமாக வெடித்தது. இதை தொடங்கி வைத்த பெருமை அமைச்சர் செல்லூர் ராஜுவையே சாரும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். நேற்று  நடந்த சமரச குழுவில் அமைச்சர் செல்லூர் ராஜு இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கார்கள் அணிவகுப்பால் திரண்ட பொதுமக்கள்
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சமரசப்படுத்த 12 அமைச்சர்கள் நேற்று காலை 11.30 மணிக்கு காரில் கிரீன்வேஸ் சாலை வந்தனர். அவரை  சமரசப்படுத்த முயற்சி செய்தனர். ஆனாலும், ஓ.பன்னீர்செல்வம் சமாதானம் அடையவில்லை. முதல்வர் வேட்பாளர் எடப்பாடி என்று அமைச்சர்கள்  கூறும்போது யாரும் கண்டுகொள்ளவில்லை. இப்போது, நான் (ஓபிஎஸ்) முதல்வர் வேட்பாளர் என்று போஸ்டர் ஒட்டியதும் சமரசம் செய்ய  வந்துள்ளீர்கள் என்று பிடிகொடுக்காமல் பேசியுள்ளார். அவர் சில நிபந்தனைகளை விதித்துள்ளார்.

அதை முதல்வர் எடப்பாடியிடம் அமைச்சர்கள் சென்று கூறினர். இப்படி மாறி மாறி அமைச்சர்கள் 4 முறை முதல்வர் வீட்டுக்கும், துணை முதல்வர்  வீட்டுக்கும் காரில் படையெடுத்தது கிரீன்வேஸ் சாலை பகுதியில் 4 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதை வேடிக்கை பார்க்க பொதுமக்கள் அந்த  பகுதியில் ஆயிரக்கணக்கில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷம்
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து சில நாட்களாக நடந்த உள்கட்சி பிரச்னை நேற்று பூதாகரமாக வெடித்தது. முதல்வர், துணை  முதல்வர் வீடுகளுக்கு அமைச்சர்கள் மாறி மாறி சென்று சமரசம் செய்தனர். அப்போது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள் குழு  பேசிக்கொண்டிருந்தபோது, ஓபிஎஸ் ஆதரவாளர் சிலர் அவரது வீடு முன் திரண்டு கோஷம் எழுப்பினர். முதல்வர் வேட்பாளரை கட்சியின்  ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ்தான் அறிவிப்பார் என்று கோஷம் எழுப்பினர்.


Tags : Chief Ministerial Candidate ,Edappadi ,Senior Ministers ,AIADMK ,OBS , AIADMK, Chief Ministerial Candidate, 12 Senior Ministers, Edappadi, OBS
× RELATED எடப்பாடி தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம்