இன்றிரவு 12 மணி முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு: மருத்துவ காரணமின்றி வெளியே வரவேண்டாம் என சென்னை காவல்துறை எச்சரிக்கை

சென்னை: இன்றிரவு 12 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை 30 மணி நேரத் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலாகிறது. மருத்துவம் சார்ந்த காரணங்கள் தவிர வேறு எதற்கும் பொதுமக்கள் வெளியில் வரக்கூடாது எனப் சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.

சென்னை பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று இரவு 12 மணி முதல் ஆகஸ்டு 17 காலை 6 மணி வரை தமிழக அரசு எந்தவிதத் தளர்வும் இன்றி முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை அன்று பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது.

அநாவசியமாக வீட்டை விட்டு வெளியே வருவதையும், தெருக்களில் சமூக இடைவெளியின்றி கூட்டமாகக் கூடி நிற்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது. இதைத் தவிர வேறு எந்தவித வாகனங்களுக்கும் அனுமதி இல்லை.

மீறிவரும் வாகனங்கள் மீது குற்றவியல் நடைமுறைப் பிரிவு 144-ன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இதற்காக நகரம் முழுவதும் 193 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: