தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கோரக்பூர் மருத்துவர் கஃபீல்கான் மீதான நடவடிக்கை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

லக்னோ: குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் பேசியதையடுத்து தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கோரக்பூர் மருத்துவர் கஃபீல் கான் மீதான நடவடிக்கை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை உத்திரப்பிரதேச அரசின் உள்துறை செயலாளர் வினய் குமார் பிறப்பித்துள்ளார். அலிகார் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்ட ஆலோசனை வாரியம் ஆகியவை அளித்த பரிந்துரையில், கஃபீல் கான் தொடர்ந்து பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து இந்த உத்தரவை உத்திரப்பிரதேச அரசு பிறப்பித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கலவரத்தைத் தூண்டிவிடும்வகையில் பேசியதால் அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உ.பி. அரசு நடவடிக்கை எடுத்தது. இதனால் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து மதுரா சிறையில் மருத்துவர் கஃபீல்கான் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 29-ம் தேதி மும்பையில் கைது செய்யப்பட்ட கஃபீல்கான் அலிகார் அழைத்துவரப்பட்டார். அவர் மீது தொடக்கத்தில் ஐபிசி 153ஏ பிரிவில் மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன்பின் ஐபிசி 153பி மற்றும் 505(2) ஆகியவை சேர்க்கப்பட்டன. இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி அலிகார் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், 13-ம் தேதி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கஃபீல்கானை உ.பி அரசு கைது செய்தது.

இதுகுறித்து கஃபீல்கான் வழக்கறிஞர் அலி காஸி கூறுகையில், கஃபீல்கான் குடும்பத்தினருக்கு நேற்று உ.பி அரசிடம் இருந்து கடிதம் வந்தது. அதில் கஃபீல்கான் மீதான தேசிய பாதுகாப்புச் சட்டம் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது என தெரிவித்தார்.

Related Stories: