×

சென்னையில் வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான நெறிமுறைகளை வெளியிட்டது மாநகராட்சி: தினசரி 3 முறை கிருமிநாசினியால் சுத்தம் செய்ய அறிவுறுத்தல்

சென்னை: சென்னையில் வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான நெறிமுறைகளை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. முன்னதாக, மாநகராட்சிகளில் 10,000 ரூபாய்க்கு குறைவான வருமானம் உள்ள வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதியளித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். அதற்கு, சென்னை மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி ஆணையரிடமும், மற்ற மாநகராட்சிப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடமும் அனுமதி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் வழிபாட்டுத் தலங்களைத் திறப்பது தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், வழிபாட்டுத் தலங்களை தினசரி 3 முறை கிருமிநாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.

நுழைவாயில்களில் கை கழுவுவதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். பிரசாதம் வழங்க அனுமதி இல்லை. அனைத்து அலுவலர்களும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். கோயில் திறக்கும் நேரம், மூடும் நேர விவரங்களை நுழைவாயிலில் வைக்க வேண்டும். விதிகளை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். வழிபாட்டுத் தலங்களைத் திறப்பதற்கான அனுமதியைப் பெற www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் வழிபாட்டுத் தளம் அமைந்துள்ள, வார்டு, மண்டலம், முகவரி, நிர்வாகியின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் மூலம் அனுமதி வழங்கப்படும். அனுமதியை வழிபாட்டுத் தலங்களில் அனைவருக்கும் தெரியும்படி வைக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : places ,Corporation ,Chennai ,times , Chennai, place of worship, protocol, corporation
× RELATED கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னையில் 188 இடங்களில் தண்ணீர் பந்தல்..!!