பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தார் நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி!

புதுடெல்லி: பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்ட நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் சீனா ஆகிய நாடுகள் சமீப காலங்களாக இந்தியாவுடன் மோதல் போக்கை மேற்கொண்டுள்ளன. இந்த நிலையில், இந்தியாவின் 74வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு நாட்டு தலைவர்களும் இந்தியாவுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலியும் இந்திய சுதந்திர தினத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பாக பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நேபாள பிரதமர் ஒலி தங்கள் நாட்டின் சார்பாக இந்தியா மக்களுக்கும், அரசுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தரமற்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் ஒலி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.  சுதந்திர வாழ்த்து தெரிவித்த நேபாள பிரதமர் ஒலிக்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி நன்றி தெரிவித்துக்கொண்டார். மேலும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இரு நாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்பை வழங்க ஆதரவு தெரிவித்துக்கொண்ட நிலையில், கொரோனா தொடர்பாக நேபாளத்திற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு தரும் என பிரதமர் மோடி நேபாள பிரதமர் ஒலியிடம் உறுதியளித்துள்ளார்.

இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.  முன்னதாக, டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டங்களில் இந்தியாவுக்கான வங்காளதேச தூதர் முகமது இம்ரான் கலந்து கொண்டார்.  அப்போது பேசிய அவர், இரு நாடுகளிடையேயான உறவு வலுப்படுவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என கூறினார். இதேபோன்று, இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் கூறும்பொழுது, இந்திய சுதந்திர தினத்தில் இந்திய அரசுக்கும் மற்றும் மக்களுக்கும் வாழ்த்துகள்.  பழமையான நாகரீக வளம் கொண்ட சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு பெரும் நாடுகளும் ஒன்றிணைந்து சமாதானத்துடன் செல்லவும் மற்றும் நெருங்கிய நட்புறவில் வளர்ச்சி காணவும் வேண்டும் என தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

Related Stories: