ஆண்டுதோறும் மத்திய அரசின் நிதியைப் பெறுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது; புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: நாடு முழுவதும் இன்று 74-வது சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. புதுச்சேரி அரசின் சார்பில் சுதந்திர தினவிழா உப்பளம் மைதானத்தில் நடைபெற்றது. விழாவையொட்டி மைதானம் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. உப்பளம் மைதானத்துக்கு வந்த முதல்வர் நாராயணசாமியை, தலைமைச் செயலாளர் அஸ்வனிகுமார், டிஜிபி பாலாஜி ஸ்ரீவஸ்தவா ஆகியோர் வரவேற்றனர். இதையடுத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் காலை முதல்வர் நாராயணசாமி தேசியக் கொடியேற்றினார். பின்னர், திறந்த ஜீப்பில் சென்று காவலர்களின் அணிவகுப்பை பார்வையிட்டார். தொடர்ந்து விழா மேடைக்கு வந்த முதல்வர் நாராயணசாமி, சுதந்திர தின உரையாற்றினார்.  

அவர் கூறியதாவது; கடந்த 2019-20 ஆம் நிதியாண்டில் புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கிய திருத்திய திட்ட மதிப்பீட்டுத் தொகையில் ரூ.7,939.74 கோடி செலவிட்டு பல மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். இது 93.13 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது. 2019-20 ஆம் ஆணடுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.37,943 கோடி ஆகும். இது முந்தைய ஆண்டைவிட 10.95 விழுக்காடு கூடுதலாகும். இது நடப்பு நிதியாண்டில் ரூ.39,541.55 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தனிநபர் வருமானம் 2019-20 ஆம் ஆண்டில் ரூ.2,32,057 ஆக உயர்ந்திருந்தது. இது நடப்பு நிதியாண்டில் தனிநபர் வருமானம் ரூ.2,36,698 ஆக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது.

பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா என்ற பயிர் காப்பீட்டுத் திட்டம் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் மாநில அரசு செலுத்தும் பிரீமியம் தொகையுடன் விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையையும் புதுச்சேரி அரசே செலுத்தி வருகிறது. கடந்த ஆண்டில் இந்த பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் 4,149 விவசாயிகளும், காரைக்காலில் 4,305 விவசாயிகளும் பதிவு செய்துள்ளனர். பால் உற்பத்தியைப் பெருக்கும் வகையில் புதுச்சேரி வெண்மைப் புரட்சித் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு கறவைப் பசுக்கள் வாங்குவதற்கு மத்திய அரசு மானியமாக 25 விழுக்காடு பொதுப்பிரிவினருக்கும், 33.3 விழுக்காடு பட்டியல் இனத்தவருக்கும் மானியமாக வழங்கப்படும்.

இந்த ஆண்டு 2 ஆயிரம் கறவைப் பசுக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மருத்துவ சேவையை அரசு மற்றும் அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சைப் பெறத் தகுதியுள்ளவர்கள். இதன் மூலம் 1,03,434 குடும்பங்கள் பயனாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 2,645 பயனாளிகளுக்கு ரூ.1.49 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மாநில அரசின் இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைகளுக்கும் 20 கிலோ இலவச அரிசிக்கான பணமும் மற்றும் அனைத்துக் குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைகளுக்கும் 10 கிலோ இலவச அரிசிக்கான பணமும் மாதந்தோறும் பயனாளிகள் வங்கிக்கணக்கில் தொடர்ந்து செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.495.88 கோடி அரசு செலவிட்டுள்ளது. இதன் மூலம் சராசரியாக மாதந்தோறும் ரூ.3.43 லட்சம் குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்கள் பயனடைந்துள்ளனர். புதுச்சேரி- கடலூர் இடையே ரயில் போக்குவரத்தினை ஏற்படுத்துவதற்கான திட்டம் மறு ஆய்வு செய்யப்பட்டு ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இதன் பொருட்டு பல்வேறு வகைப் பணிகளான இறுதி நிலை வழித்தட அளவீடு, மண்தர ஆய்வு மற்றும் பணிகளை மேற்கொள்வதற்கான செயல்திட்டத்தையும் தயாரிக்க தெற்கு ரயில்வே பிரிவு ஒப்புதல் அளித்துள்ளது. காரைக்காலிலிருந்து பேரளத்திற்கான அகல ரயில் பாதை அமைத்தல் மற்றும் அதனையொட்டிய பணிகளுக்கான பணி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் மூலமாக ரூ.17 கோடி உதவியுடன் ஓட்டுநர் பயிற்சி நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி துறைமுகத்தை மேற்படுத்த சாகர்மாலா திட்டத்தின் மூலம் ரூ.44 கோடி நிதி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Stories: