×

அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியீடு?: ஓ.பி.எஸ்சை தொடர்ந்து முதல்வர் பழனிசாமியுடன் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை.!!!

சென்னை: தமிழகத்தில் 2021 மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் சில மாதங்களே உள்ளன. தேர்தலையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பணிகளை தொடங்கியுள்ளன. இந்நிலையில், வருகிற சட்டமன்ற  தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் பிரசாரம் செய்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துகளை  தெரிவித்து வருகிறார்கள்.

அதிமுகவுக்குள் இதுபோன்ற ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என அவரது தொகுதியான போடி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசி  பெற்ற ஒரே முதல்வர் ஓ.பி.எஸ் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எனவும் போஸ்டரில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த நிலையில், பெரியகுளம் தென்கரையில் ஓபிஎஸ் இல்லம்  அருகே ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து பேசிய தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையதுகான், ஓபிஎஸ்க்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கும் தேனி மாவட்ட நிர்வாகிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தனிப்பட்ட நபர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்,  என விளக்கமளித்துள்ளார். இதுபோன்ற பரபரப்பான சூழ்நிலையில், மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், செங்கோட்டையன், மாஃபா பாணடியராஜன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி,   சி.விஜயபாஸ்கர், காமராஜ், உடுமலை கே. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தினர்.

துணை முதல்வருடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தியப்பின் மூத்த அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.  சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள முதல்வர்  எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தப்பின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தல் முடியும் வரை முதல்வர்  வேட்பாளர் குறித்து கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் யாரும் பேசக்கூடாது என்று அறிவிப்பு வெளியிடவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.



Tags : Palanisamy ,announcement ,Chief Ministerial ,AIADMK ,Senior Ministers ,candidate , Important announcement regarding AIADMK CM candidate ?: Senior ministers consult with Chief Minister Palanisamy following OPS. !!!
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...