ஓபிஎஸ் இல்லம் அருகே ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிப்பு: போஸ்டருக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமில்லை என தேனி மாவட்ட செயலாளர் விளக்கம்

தேனி: துணை முதல்வர் ஓ.பன்னீசெல்வம் அடுத்த முதல்வர் என ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2021 மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பணிகளை தொடங்கியுள்ளன. இந்நிலையில், வருகிற சட்டமன்ற  தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் பிரசாரம் செய்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துகளை  தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என அவரது தொகுதியான போடி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது  சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசி பெற்ற ஒரே முதல்வர் ஓ.பி.எஸ் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எனவும் போஸ்டரில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த நிலையில், பெரியகுளம் தென்கரையில் ஓபிஎஸ் இல்லம் அருகே ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து பேசிய தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையதுகான், ஓபிஎஸ்க்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கும் தேனி மாவட்ட நிர்வாகிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தனிப்பட்ட நபர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர், என விளக்கமளித்துள்ளார்.

Related Stories: