அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? அதிமுகவில் நீடிக்கும் குழப்பம்...துணை முதல்வர் ஓபிஎஸ்-உடன் மூத்த அமைச்சர்கள் திடீர் ஆலோசனை.!!!

சென்னை: தமிழகத்தில் 2021 மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் சில மாதங்களே உள்ளன. தேர்தலையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பணிகளை தொடங்கியுள்ளன. இந்நிலையில், வருகிற சட்டமன்ற  தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் பிரசாரம் செய்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துகளை  தெரிவித்து வருகிறார்கள். அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டவர்கள் எடப்பாடி பழனிசாமிதான் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என்று கூறினர். அதேநேரம் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஜெயக்குமார்  உள்ளிட்டவர்கள் தேர்தல் முடிந்த பிறகுதான் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும், கட்சி தலைமை கழக நிர்வாகிகள் இதுபற்றி அறிவிப்பார்கள் என்றும் கூறி வருகிறார்கள்.

அதிமுகவுக்குள் இதுபோன்ற ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக பாஜ துணை தலைவர் வி.பி.துரைசாமி கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் பேட்டி அளித்தபோது, “வருகிற தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக - பாஜ  இடையேதான் போட்டி. பாஜ தலைமையில்தான் தேர்தல் கூட்டணி அமைக்கப்படும்” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இது அதிமுக தலைமைக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் தற்போதுள்ள பிரச்னையை  பயன்படுத்தி, பாஜ அதிக சீட்டுகளை எதிர்பார்த்து இப்போதே காய் நகர்த்த தொடங்கியுள்ளதாகவே இது கருதப்படுகிறது.

இதுபோன்ற பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி மற்றும் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், அமைப்பு செயலாளர் மனோஜ் பாண்டியன் ஆகியோர் நேற்று முன்தினம் வரும்  சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக யாரை அறிவிக்க வேண்டும் என்பது குறித்து அமைச்சர்கள் இடையே நடைபெற்று வரும் மோதல் தொடர்பாக விவாதித்தனர். ஆளாளுக்கு பலவித கருத்துகளை தெரிவிக்கின்றனர். இதனால் இப்  பிரச்னையில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் பாதியிலேயே முடிந்தது.

இதற்கிடையே, தமிழகத்தில் அடுத்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என அவரது தொகுதியான போடி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசி பெற்ற ஒரே  முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதனைபோல், மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், செங்கோட்டையன், மாஃபா பாணடியராஜன். திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி,  சி.விஜயபாஸ்கர், காமராஜ், உடுமலை கே. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தி  வருகின்றனர்.   இதனைபோல், மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தவுள்ளார்.  சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

Related Stories: