×

நீரில் மூழ்கிய இளைஞர்களை காப்பாற்றிய 3 பெண்களுக்கு வீரதீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது: முதல்வர் பழனிசாமி வழங்கினார்!

சென்னை: வீரதீர செயலுக்கான தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது, பெரம்பலூரை சேர்ந்த ஆனந்த வள்ளி, செந்தமிழ், முத்தம்மாள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கொட்டரை நீர்த்தேக்கத்தில் கடந்த ஆக.6ம் தேதி சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குளித்தனர். அப்போது, நீர்த்தேக்க வடிகாலில் தவறி விழுந்த 4 பேரில், நீரில் மூழ்கி பயிற்சி மருத்துவர், பாலிடெக்னிக் மாணவர் என 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

மேலும் 2 இளைஞர்கள் உயிருக்கு போராடினர். அப்போது, அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்த அத்தியூர் அங்காளம்மன் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி செந்தமிழ்ச்செல்வி, அண்ணா மலை மனைவி ஆனந்தவள்ளி, ஆதனூர் நடுத்தெருவைச் சேர்ந்த சுந்தரபாலன் மனைவி முத்தம்மாள் ஆகியோர் அணிந்திருந்த சேலையை அவிழ்த்து 3 சேலைகளையும் ஒன்றாகக் கட்டி ஒரு முனையை தண்ணீ ரில் வீசி, மறுமுனையை மூவரும் பிடித்துக்கொண்டு தண்ணீரில் தத்தளித்த மற்ற 2 இளைஞர்களையும் மீட்டனர்.

கொட்டரை நீர்த்தேக்கத்தில் குளிக்க வந்த சிறுவாச்சூரைச் சேர்ந்த பலரும், மீட்கப்பட்ட 2 இளைஞர்களும் தாங்கள் மீட்கப்பட்ட விதம் குறித்து பலருக்கும் தெரிவித்தனர். இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி, இருவரையும் மீட்ட 3 பெண்களுக்கும் பாராட்டு குவிந்தது. இதையடுத்து, தண்ணீரில் மூழ்கிய 2 இளைஞர்களை உயிருடன் மீட்ட 3 பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நிலையில், 74வது சுதந்திர தினத்தையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் இன்று கொடியற்றினார். பின்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். இதைத்தொடந்து, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில்,  துணிவு மற்றும் சாகச செயலுக்கான தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.


Tags : women ,Palanisamy , Perambalur, 3 women, Kalpana Chawla Award, Government of Tamil Nadu, Independence Day, Chief Minister
× RELATED கள்ளழகர் திருவிழாவில் நகை திருட்டு: 5 பெண்கள் கைது