தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.17,000-ஆக உயர்வு: அல்லும் பகலும் தமிழக மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன்: சுதந்திர தின விழாவில் முதல்வர் பழனிசாமி உரை.!!!

சென்னை: நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை, கோட்டை கொத்தளத்தில் 4-வது முறையாக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய  முதல்வர் பழனிசாமி, 4-வது முறையாக தேசிய கொடியை ஏற்றி வைத்ததில் பெருமை அடைகிறேன் என்றார். நாட்டு  மக்கள் அனைவருக்கும் சுதந்திர தினம் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களின் அன்பு, ஆதரவை பெற்றுள்ள  நான் மக்களின் நலவாழ்வு ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ளேன். அல்லும் பகலும் தமிழக மக்களுக்காக உழைத்துக்  கொண்டே இருப்பேன் என்றார்.  

மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம்.சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான  ஓய்வூதியம் ரூ.16,000- லிருந்து ரூ.17,000-ஆக உயர்த்தப்படுகிறது. தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கான ஓய்வூதியம்  ரூ.8,000-லிருந்து ரூ.8,500-ஆக உயர்த்தப்படும் என்றார். கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப்  பணியாளர்கள், உள்ளாட்சி, வருவாய்த்துறை, காவல் - தீயணைப்புத்துறை மற்றும் அரசு துறை ஊழியர்களுக்கு  முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார். கொரோனா தொற்றுக்கு எதிராக தமிழக அரசு, பொதுமக்களின்  ஒத்துழைப்புடன்போராடி வெல்லும் என்று உறுதியாக தெரிவித்தார்.

 குடிசை இல்லா தமிழகத்தை உருவாக்க ரூ 7,500 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். கொரோனா காலத்திலும் பொருளாதார நடவடிக்கை மேற்கொள்ள வல்லுனர் குழு அமைப்படும். பொருளாதாரத்தில் தமிழகம் வெகு விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று  வருகிறது, விரைவில் திறக்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% ஒதுக்கீடு வழங்க சட்டம்  பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கேரள அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக  பரம்பிக்குளம்-ஆழியாறு, பாண்டியாறு - புன்னம்புழா திட்டங்களில் நிலவிய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ 300 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.

பெண்களின் வளர்ச்சியை மேம்படுத்த மகளிர் குழுவிற்கு சுழல்நிதி மற்றும் கடன் வழங்கப்படும். உடுமலைபேட்டையில் புதிய கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும். கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1,433 கோடி மதிப்பில் 6,278 நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்றார். கடந்த 8 ஆண்டுகளில் உணவு தானிய உற்பத்தியில் 6 முறை 100 லட்சம் மெட்ரிக் டன் தாண்டி தமிழக அரசு சாதனை படைத்துள்ளது.

Related Stories: