முன்னாள் கவர்னர் வீட்டில் சூதாட்டம்: அதிமுக பிரமுகர் உள்பட 29 பேர் கைது: போலீசார் அதிரடி நடவடிக்கை

சென்னை: ஆர்.ஏ.புரம்  பகுதியில் முன்னாள் கவர்னரின் அடுக்குமாடி குடியிருப்பில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் 29 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9.55 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில் சட்டத்திற்கு புறம்பாக பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டதன்பேரில், பட்டினப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில், பட்டினம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்த போது, போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஆர்.ஏ.புரம், கற்பகம் அவென்யூவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை சோதனை செய்தபோது, அங்கு   பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவது தெரியவந்தது.

அதன்பேரில், சூதாட்டத்தில் ஈடுபட்ட முகப்பேர், கோல்டன் ஜார்ஜ் நகர் பகுதியை சேர்ந்த மகேந்திரன் (51), முடிச்சூர் பகுதியை சேர்ந்த கோபி (46), செவ்வாய் பேட்டை பகுதியை சேர்ந்த ரவி (46), ஈக்காட்டுத்தாங்கல் பகுதியை சேர்ந்த ராம்குமார் (38), அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த வீரராகவன் (62) உட்பட 29 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ₹9.55 லட்சம் பணம் பறிமுதல் செய்தனர். இந்த வீடு முன்னாள் கவர்னர் ஒருவரின் வீடு என்று கூறப்படுகிறது. அந்த வீட்டை அவர் வாடகைக்கு விட்டுள்ளார். அந்த வீட்டில்தான் அதிமுக பிரமுகர் ஒருவர், சூதாட்டம் நடத்தி வந்தது தெரியவந்தது.

Related Stories: