கொரோனா யுத்தத்தை தொடர்ந்து ‘பயோ-வார்’ ஆன்லைன் மூலம் ஊடுருவும் வெளிநாட்டு போலி விதைகள்: பல்லுயிர் பெருக்கம் பாதிக்கும் அபாயம்

நெல்லை: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் எப்போதுமே ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது வழக்கம். ஆனால் அரசுகளுக்கு தெரியாமலே மக்கள் மத்தியில் விதைகளை பரப்ப பல்வேறு உபாயங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போலி விதைகளை ஒரு நாட்டில் ஊடுருவச் செய்வோரின் முதல் குறியாக ஆன்லைன் ஷாப்பிங் உள்ளது. ஆன்லைன் பணபரிமாற்றம், ஆன்லைன் பொருட்கள் வாங்குவோரிடம் சில வெளிநாட்டு நிறுவனங்கள், தங்கள் வாங்கும் பொருட்களுக்கு சிற்சில விதைகள் இலவசம் எனக்கூறி பாக்கெட்டை அனுப்பி விடுகின்றன. 100 கிராம், 200 கிராம் வடிவில் காணப்படும் இவ்விதைகள் செழித்து பூ பூத்து காணப்படும் படங்களையும், இயற்கை எழில் நிறைந்து அவை மரமாக மாறுவதையும் படம் பிடித்து அனுப்புகின்றனர்.

இத்தகைய விதைகளை பதியம் போட்டால், உங்கள் பகுதி செழிக்கும் என்பது போன்ற வாசகங்களை உருவாக்கி விதைகளை அனுப்பி வைக்கின்றனர். மரங்களின் அழகில் மயங்கி பலரும் அவற்றை பதியம் போட்டு வளர்க்கின்றனர். பல்லுயிர் பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும் இத்தகைய செடிகளும், மரங்களும் விதைகள் வடிவில் இந்தியாவிற்குள் நுழைவதை கண்காணிக்க மத்திய வேளாண் அaமைச்சகம் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, இந்தியாவிற்குள் வரும் விதைகள் அனைத்தும் பல்லுயிர் பெருக்கம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு ஆபத்து விளைவிக்காது என்று உறுதி செய்யப்பட்ட பின்னரே விற்பனைக்கோ அல்லது மக்கள் பயன்பாட்டிற்கோ அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து அங்கீகாரமற்ற விதைகள், 100 கிராம், 200 கிராம் பாக்கெட்டுகளில் இந்தியாவுக்கு அனுப்பப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதையடுத்து மாநில அரசுகளை மத்திய அரசின் வேளாண் அமைச்சகம் எச்சரித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழக வேளாண்துறை உத்தரவின்பேரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தற்போது வெளிநாட்டு போலி விதைகள் வருகை குறித்து அடிக்கடி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வேளாண் துறை, விதைச்சான்று கண்காணிப்புத்துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் போலி விதைகளை கண்காணிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து நெல்லை மாவட்ட வேளாண்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘மாவட்டம்தோறும் விதை கண்காணிப்பு ஆய்வாளர்கள், கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆன்லைனில் விதை பார்சல்கள் வந்தால் யாரும் வாங்க வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக் கொண்டு வருகிறோம். வெளிநாட்டு பூக்களுக்கான விதைகள் எனக்கூறி சந்தேகம் அடையும் வகையில் யாருக்காவது பொருட்கள் கிடைத்தால், அவற்றை விதைச்சான்று அலுவலகங்களில் அளித்து தரம் பரிசோதிக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: