×

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு: இஸ்ரேல் - யுஏஇ அமைதி ஒப்பந்தம்:அமெரிக்காவின் முயற்சிக்கு வெற்றி

வாஷிங்டன்: இஸ்ரேல்- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) இடையே வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள இஸ்ரேல், கடந்த 1948ம் ஆண்டு தனி நாடாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்பிராந்தியத்தில் உள்ள பாலஸ்தீனம், லெபனான், எகிப்து, ஜோர்டான், ஈராக் உள்ளிட்ட அரபு நாடுகள் இஸ்ரேலை தனி நாடாக ஏற்கவில்லை. இஸ்ரேல் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில், 1979ல் எகிப்தும், 1994ல் ஜோர்டானும் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன. அதே சமயம், இஸ்ரேலுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தொடர்ந்து மோதல் போக்கையே கொண்டிருந்தது.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இஸ்ரேலை எதிரி நாடாகவே பாவித்தது. இஸ்ரேல் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை தடை செய்தது. இந்நிலையில், நீண்டகால விரோதிகளாக இருந்து வந்த இவ்விரு நாடுகளுக்கும் இடையே, அமெரிக்காவின் சமரச முயற்சியால் நேற்று முன்தினம் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், இருநாடுகளுக்கும் இடையே இனிமேல் வழக்கமான தூதரக, வர்த்தக உறவுகள் ஏற்படும்.  இது தொடர்பாக அமெரிக்கா-இஸ்ரேல்-யுஏஇ கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

இதன் மூலம், பாலஸ்தீனத்தை ஒட்டியுள்ள மேற்கு கரை பகுதியை தனது நாட்டுடன் இணைக்கும் திட்டத்தை கைவிடுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் எதிரியான ஈரானை தனிமைப்படுத்த தனது நட்பு நாடுகளை அமெரிக்கா ஓரணியில் திரட்ட முயற்சிக்கிறது. அதன்பலனாக தற்போது இஸ்ரேல்-யுஏஇயை ஒன்று சேர்த்துள்ளது. இதன் காரணமாக மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்திய ஈரானின் பலம் குறைந்துள்ளது

ஈரான், துருக்கி எதிர்ப்பு
இந்த ஒப்பந்தத்திற்கு ஈரான், துருக்கி, பாலஸ்தீனம் ஆகியவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஈரான் வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், ‘இருநாடுகள் இடையேயான உறவு சீராவது அபாயகரமானது, அவமானகரமானது. பாலஸ்தீனம் மற்றும் அனைத்து முஸ்லிம்களுக்கும் யுஏஇ அநீதி இழைத்து விட்டது’ என கூறப்பட்டுள்ளது. பாலஸ்தீனமும் தங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.


Tags : event ,UAE ,Israel ,US , Historic event, Israel, UAE, USA
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...