×

ஆரம்பிச்சிட்டாருய்யா... ஆரம்பிச்சிட்டாரு...! அமெரிக்க துணை அதிபராகும் தகுதி கமலாவுக்கு இல்லை: குடியுரிமை பற்றி சந்தேகம் கிளப்பினார் டிரம்ப்

வாஷிங்டன்: முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவைப் போலவே கமலா ஹாரிசும் அமெரிக்காவில் பிறந்தவரா என சந்தேகத்தை கிளப்பி, ‘துணை அதிபராகும் தகுதி அவருக்கு இல்லை’ என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விஷமத்தனமாக பேசி உள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடும் அதிபர் டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடென் போட்டியிடுகிறார். இதே கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியான, தமிழகத்தை சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், துணை அதிபருக்கான வேட்பாளர் போட்டியில் கமலாவிடம் தோல்வி அடைந்த ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜான் ஈஸ்ட்மேன் என்ற பிரபல வக்கீல், பத்திரிகை ஒன்றில் எழுதிய கட்டுரையில், கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் பிறந்தது குறித்து சந்தேகத்தை கிளப்பினார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த கட்டுரையை குறிப்பிட்டு பேசிய அதிபர் டிரம்ப், ‘‘கமலா ஹாரிஸ் துணை அதிபர் ஆவதற்கான தகுதியை பூர்த்தி செய்யவில்லை என பிரபல வக்கீல் கூறியிருக்கிறார். அது சரியான கருத்தா என்று எனக்கு தெரியாது.

ஆனால், கமலாவை துணை அதிபருக்கான வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்னர் இதுகுறித்து ஜனநாயக கட்சியினர் பரிசோதித்து இருப்பார்கள் என்று கருதுகிறேன். எனினும், அவர் இந்த நாட்டில் பிறக்கவில்லை என்றும், அவருக்கு போட்டியிட தகுதியில்லை என்றும் கூறப்படுவதால் இதுவொரு தீவிரமான விவகாரம்தான்,’’ என்றார். அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தை பொறுத்த வரை, 1787ம் ஆண்டுக்குப் பின் அமெரிக்காவில் பிறந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அந்நாட்டின் இயற்கையான குடிமகன்களாகவே கருதப்படுகின்றனர். கமலா ஹாரிசை பொறுத்த வரையில் தமிழகத்தை சேர்ந்த தாய்க்கும், ஜமைக்காவை சேர்ந்த தந்தைக்கும் 1964ம் ஆண்டு அக்டோர் 20ல் கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் பிறந்தவர்.

பிறப்பால் அவர் அமெரிக்கர் இல்லாவிட்டாலும், அமெரிக்காவில் பிறந்தவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனால், டிரம்ப் மற்றும் ஈஸ்ட்மேனின் பேச்சுகள் இனவெறி கொண்டதாக இருப்பதாக அந்நாட்டினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதே போல், கடந்த 2008ம் ஆண்டு பாரக் ஒபாமா அதிபராக களத்தில் நின்ற போதும் குடியரசு கட்சியினர் இதே போன்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். ஒபாமா கென்யாவில் பிறந்தவர், அமெரிக்காவில் பிறக்கவில்லை என சதி முயற்சிகள் செய்தனர். அவற்றை முறியடித்த ஒபாமா முதல் கறுப்பின அதிபராக சாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘உலகமே சிரிக்கும்’
அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், ‘‘பிடென் கொரோனாவை அரசியலாக்குவதையும், அமெரிக்கர்கள் மீது அவருக்கு மரியாதை இல்லாததையும் நாம் பார்த்து வருகிறோம்.அவர் அதிபரானால், அமெரிக்காவை பார்த்து உலகமே சிரிக்கும். இதனால், நம் நாடு வீழ்ச்சி அடைந்து நாசமாகிவிடும்’’ என்றார்.



Tags : US Vice President, Kamala, Trump
× RELATED அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின்...