மாரடைப்பு வருமா, வராதா? கண் கருவிழி கட்டியம் கூறும்

சிலருக்கு மூச்சு பிடிப்பு வந்தாலே மாரடைப்பு வருவது  போன்ற ஒரு பிரமை. உருளைக்கிழங்கு சாப்பிட்டது கூட காரணமாக இருக்கலாம். பதற தேவையில்லை. சும்மா கண்ணை உத்துப் பார்த்தாலே போதும். மாரடைப்பு வருமா வராதா என்பதை அதுவே உங்களுக்கு சொல்லி விடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.   கண்ணின் கருவிழி அகண்டு இருப்பது சிலருக்கு அழகுதான். ஆனால் அந்தக் கரு விழிக்கும் அதிலுள்ள பாவைக்கும் இடையில் உள்ள வித்தியாசம்தான் இதயம் எப்படி இருக்கிறது என்பதை வெளிகாட்டும் கண்ணாடி. இதயத்தில் அடைப்பு ஏற்படுவதற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன. இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய் அடைத்து விட்டால் ஆபத்தில் முடிந்துவிடும். எத்தனையோ பிரபலங்கள் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார்கள். இவர்களில் பலர் திடகாத்திரமாகவும் நல்ல உடல் நலத்தோடும் இருந்தவர்கள்.

 கடும் உணவுக் கட்டுப்பாட்டுடன், பார்த்து பார்த்து சாப்பிட்டு உடலைப் பேணுபவர்களுக்கு இது எப்படி சாத்தியம் என வியந்த மருத்துவர்கள் குழு, அந்த பிரபலங்களின் துல்லியமான டிஜிட்டல் படத்தை வைத்து ஆய்வு செய்தனர். அதில்தான் கண் கருவிழிக்கும் இதய பாதிப்புக்கும் உள்ள தொடர்பு தெரியவந்துள்ளது.   அந்தக் குழுவில் ஒரு டாக்டர் இந்தியர்; ஐதராபாத்தைச் சேர்ந்தவர். அயர்லாந்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். மருத்துவ இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இந்த ஆய்வு விவரங்களை கூறியுள்ளார்.   பிரபலங்களின் துல்லியமான டிஜிட்டல் படங்களை வைத்து, கண்களின் அமைப்பை ஆராய்ந்தோம். அப்போது, மாரடைப்பால் இறந்தவர்களின் கண்ணில், கருவிழிக்கும் பாவைக்கும் உள்ள விகிதாச்சாரம் குறைவாக இருந்தது என அவர் கூறியுள்ளார்.

 மாரடைப்பால் இறந்தவர்கள் மட்டுமல்ல, இப்படி கருவிழிக்கும் பாவைக்கும் இடையே உள்ள விகிதாச்சாரம் குறைவாக இருப்பது மன அழுத்தத்தின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். படபடப்பு அதிகரிக்கும்.  அதற்காக கண்ணில் ஸ்கேல் வைத்து அளந்து பார்த்து பதறாதீர்கள். இந்த ஆய்வு ஒரு முன்னெச்சரிக்கைதான்.  கொரோனாவால் கூட பலருக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. கலகலப்பா இருங்க. உணவில் கவனம் செலுத்துங்க… உங்கள் கவலை, டென்ஷன் மட்டுமல்ல… ஆபத்து நெருங்கவே நெருங்காது.  ‘அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்’  என  வான்புகழ் வள்ளுவன் சொன்னது பொருத்தமாகத்தானே இருக்கிறது.

Related Stories:

>