×

கொரோனாவை எதிர்கொள்ள நீங்கள் காட்டிய பொறுமையும், அறிவும் உலகம் பாராட்டுகிறது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை

டெல்லி: இந்தியாவின் 74வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். நாட்டின் 74வது சுதந்திர நாளை ஒட்டி, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, கொண்டாட்டங்களில் கலந்து கொள்வது, தேசபக்திப் பாடல்களைக் கேட்பது என ஆகஸ்ட் 15ஆம் தேதி உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சுதந்திரமான தேசத்தின் குடிமக்களாக நாம் இருக்கிறோம் என்ற விசேஷமான பெருமையை இந்திய இளைஞர்கள் இந்த நாளில் உணர்ந்திட வேண்டும். சுதந்திரமான தேசத்தில் நாம் வாழ வழிவகுத்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளை நன்றியுடன் நாம் நினைவுகூர்கிறோம்.

நமது சுதந்திரப் போராட்டத்தின் நெறிகள் தான் நவீன இந்தியாவின் அடித்தளமாக உள்ளன. தொலைநோக்குப் பார்வை கொண்ட நமது தலைவர்கள், உலகின் பன்முக அம்சங்களை ஒன்றாகப் பிணைத்து தேசத்தின் பொதுவான உத்வேகமாக உருவாக்கியுள்ளனர். அந்நியர்களின் அடக்குமுறை ஆதிக்கத்தில் இருந்து பாரத மாதாவை விடுவித்து, அதன் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் ஏற்படுத்த வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். அவர்களுடைய சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளால் இந்தியாவை நவீன தேசமாக அடையாளப்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டது.

சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் வழிகாட்டியாக மகாத்மா காந்தி அமைந்தது நமக்குக் கிடைத்த அதிர்ஷ்டம். சமத்துவம் மற்றும் நீதி என்பதில் அவர் கொண்டிருந்த தாகம் தான் நமது குடியரசின் மந்திரமாக உள்ளது. காந்திஜியை இளைஞர்கள் மீண்டும் வாசிக்கத் தொடங்கி இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆண்டு சுதந்திரத் திருநாள் கொண்டாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும். இதற்கான காரணம் நீங்கள் அறிந்தது தான். அனைத்து செயல்பாடுகளையும் முடக்கி, பெருமளவு உயிர்ப்பலிகள் வாங்கியுள்ள மோசமான வைரஸ் பாதிப்பில் உலக நாடுகள் சிக்கித் தவிக்கின்றன. நோய்த் தொற்று பரவலுக்கு முன்பு நாம் வாழ்ந்த உலகின் இயல்புகளை இது மாற்றிவிட்டது.

இந்த வைரஸ் பாதிப்புக்கு எதிரான நடவடிக்கைகளை முன்களத்தில் நின்று எதிர்கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள், இதர சுகாதார அலுவலர்களுக்கு இந்த தேசம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. துரதிருஷ்டவசமாக அவர்களில் பலர், தொற்று நோயால் இறந்துள்ளனர். அவர்கள் நமது தேசத்தின் கதாநாயகர்கள். கொரோனாவுக்கு எதிரான போராளிகள் அனைவரும் மிகுந்த பாராட்டுக்கு உரியவர்கள். உயிர்களைக் காப்பாற்றவும், அத்தியாவசிய சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யவும், வேலை நேரத்திற்குப் பிறகும் அவர்கள் பணியாற்றியள்ளனர்.

இந்த மருத்துவர்கள், சுகாதார அலுவலர்கள், பேரழிவு மேலாண்மைக் குழுக்களின் உறுப்பினர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், பொருள் வழங்கு அலுவலர்கள், போக்குவரத்து, ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அலுவலர்கள், சமூகசேவை அமைப்புகள் மற்றும் தாராள மனம் கொண்ட குடிமக்கள் ஆகியோர் துணிச்சலான, தன்னலமற்ற சேவைகளைச் செய்துள்ளனர். பெருநகரங்களும், நகரங்களும் அமைதியாகிவிட்டன, சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. மக்களுக்கு ஆரோக்கியம் மற்றும் நிவாரணம், தண்ணீர் மற்றும் மின்சாரம், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு வசதிகள், பால், காய்கறிகள், உணவு மற்றும் மளிகைப் பொருள்கள், மருந்து மற்றும் இதர அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய அவர்கள் ஓய்வின்றி உழைத்து வருகின்றனர். நமது வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களைக் காப்பாற்ற தங்கள் உயிர்களைப் பணயம் வைத்து அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

இயற்கை அன்னை முன்பாக நாம் அனைவரும் சமம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான தேவையை இந்த பெருந்தொற்று வலியுறுத்தியுள்ளது. பெருந்தொற்றை எதிர்கொள்ள நீங்கள் அனைவரும் காட்டிய பொறுமையும், அறிவும் உலகம் முழுவதும் பாராட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து எச்சரிக்கையாக இருந்து பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். அனைவரும் நோய் நொடியின்றி இருக்க வேண்டும், புனிதமானவற்றை அனைவரும் காண வேண்டும், யாருக்கும் கெடுதல் நேரக் கூடாது. உலக நன்மைக்கான இந்த பிரார்த்தனையின் செய்தி மனிதகுலத்துக்கு இந்தியாவின் பிரத்யேகப் பரிசாகும். ஜெய் ஹிந்த்! இவ்வாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது உரையில் தெரிவித்துள்ளார்.Tags : world ,Ramnath Govind ,Corona ,Independence Day , Independence Day, Ramnath Govind, Speech
× RELATED நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட...