×

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கலக்கும் மன்னை சிங்கப்பெண் கமலா ஹாரிஸ்; வெற்றி பெற்று சொந்த ஊருக்கு வர கிராமத்தினர் ஆசை

மன்னார்குடி: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 3 ம் தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களமிறங்கி இருக்கிறார். கொரோனா வைரஸ் தாக்கம், அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகள் மற்றும் கருப்பின மக்களின் போராட்டத்தால் ஏற்பட்டுள்ள அமைதியின்மை ஆகியவை நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இந்தத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என ஜோ பிடன் சூளுரைத்துள்ளார். மேலும் துணை அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கலிபோர்னியா செனட் சபை உறுப்பினர் கமலா ஹாரிஸ் (55) போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை அதிபர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள முதல் கருப்பின பெண் மற்றும் முதல் ஆசிய அமெரிக்க பெண் கமலா ஹாரிஸ் ஆவார். துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிசின் பூர்வீகம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு கிராமம் ஆகும். இவரது தாய் வழி தாத்தா பி.வி.கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள். கோபாலன் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் சிவில் சர்வீசில் பணியாற்றியவர். 1930ம் ஆண்டு ஜாம்பியா நாட்டிற்கு கொடிசியாவில் இருந்து வந்த அகதிகளை கணக்கெடுக்க அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டவர். பின்னர் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறிவிட்டார். இவருக்கு சியாமளா, சரளா என இரு பெண் குழந்தைகள். இதில் சியாமளா ஜமைக்கா நாட்டை சேர்ந்த கறுப்பினத்தவரான டொனால்டு ஹாரிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு கமலா, மாயா என இரண்டு பெண் குழந்தைகள். இதில் கமலா ஹாரிஸ் தான் தற்போது அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். இதுகுறித்து சென்னையில் இருக்கும் கமலா ஹாரிசின் உறவினர் ஒருவர் கூறுகையில், கடந்த 1991 ம் ஆண்டு சென்னையில் நடந்த தனது தாத்தா கோபாலனின் 80 வது பிறந்தநாள் விழாவில் கமலா ஹாரிஸ் பங்கேற்று உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருந்தார் என கூறினார். இதுகுறித்து பைங்காநாடு கிராமத்தில் வசிக்கும் ரமணன் கூறுகையில், எங்கள் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் உயர் பதவிக்கு போட்டியிடுவதன் மூலம் எங்கள் கிராமம் உலகளவில் புகழ் பெற்றுள்ளது. அருகில் துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள தர்ம சாஸ்தா கோயில் தான் அவர்களின் குல தெய்வ கோயிலாகும்.

இக்கோயிலுக்கு கடந்த 2014 ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கு கமலா ஹாரிஸ் குடும்பத்தினர் நன்கொடை அளித்துள்ளனர். அதற்கான கல்வெட்டு கோயிலில் உள்ளது. தற்போது இவர்களின் குடும்பத்தினர் யாரும் இந்த ஊரில் வசிக்கவில்லை. தேர்தலில் அவர் மகத்தான வெற்றி பெற்று தனது பூர்வீக கிராமமான எங்கள் ஊருக்கு அவர் வர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என கூறினார். அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு தங்கள் கிராமத்தை சேர்ந்த கோபாலனின் பேத்தி கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார் என்ற தகவலை அறிந்த பைங்கா நாடு கிராம மக்கள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.

Tags : Kamala Harris ,election ,Presidential ,hometown ,US ,Singaporean , U.S. Vice President, Election, Kamala Harris
× RELATED கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்