சேலம் 8 வழிச்சாலை: பணிகள் 2025-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று கூறுவது உச்ச நீதிமன்ற அவமதிப்பாகும் : அன்புமணி கண்டனம்

சென்னை : சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, அன்புமணி ராமதாஸ் இன்று (ஆக.14) வெளியிட்ட அறிக்கை:

சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அத்திட்டம் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் செயல்படுத்தி முடிக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தயாரித்து வெளியிட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் திட்டங்களின் தற்போதைய நிலவரம் குறித்த அறிக்கையில், இந்த விபரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக நானும், சில வழக்கறிஞர்களும் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து விட்ட நிலையில், அத்திட்டத்தின் பணிகளைத் தொடங்கவே முடியாது என்பது தான் உண்மையாகும். அவ்வாறு இருக்கும் போது, சென்னை - சேலம் 8 வழிச்சாலை பணிகள் 2025-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று கூறுவது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

8 வழிச்சாலைத் திட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை இன்னும் முடிவடையவில்லை. வழக்கின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. அத்தகைய சூழலில் இன்னும் சில ஆண்டுகளில் சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றி முடிக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறுகிறது என்றால், அது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் தான்.

விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் இந்தத் திட்டத்தை செயல்படுத்திவதில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தீவிரம் காட்டக் கூடாது. மாறாக, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

Related Stories: