×

ரஷ்யாவில் உயிரிழந்த தமிழக மாணவர்கள் 4 பேரின் உடல்கள் அடுத்த வாரம் தாயகம் வரும் என எதிர்பார்ப்பு: மத்திய வெளியுறவுத்துறை

புதுடெல்லி: ரஷ்யாவில் உயிரிழந்த தமிழக மாணவர்கள் 4 பேரின் உடல்கள் அடுத்த வாரம் தாயகம் வரும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வெளியுறவுத்துறை  தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் வோல்கோகிராட் மாகாணத்தில் உள்ள, வோல்கோகிராட் மாகாண மருத்துவப் பல்கலைக்கழகத்தில், தமிழகத்தைச் சேர்ந்த முகம்மது ஆசிக், மனோஜ் ஆனந்த், ஸ்டீபன், விக்னேஷ் ராமு ஆகிய மாணவர்கள் மருத்துவம் பயின்று வந்தனர். கடந்த வார இறுதியில், 09.08.2020(ஞாயிற்றுக்கிழமை) அன்று, வார விடுமுறையை மகிழ்வுடன் கழிக்க வோல்கா நதிக்கு சென்ற மாணவர்கள் நான்கு பேரும், எதிர்பாராத விதமாக ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ரஷ்யாவில் உயிரிழந்த மாணவர்களின் உடல்களை கூடிய விரைவில் தாயகம் கொண்டு வர பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளிதரன் பேசியுள்ளார். அப்போது தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்களின் உடலை விரைவாக இந்தியா அனுப்பத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுள்ளார். இதையடுத்து, இதுதொடர்பாக  தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளிதரன், ரஷ்யாவின் வோல்கா ஆற்றில் மூழ்கி தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் உயிரிழந்தநிலையில் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். மாஸ்கோவில் உள்ள இந்தியத்தூரகத்தில் இதுதொடர்பாக நான் பேசினேன். தமிழக மாணவர்கள் 4 பேரின் உடல் அடுத்தவாரம் தொடக்கத்தில் இந்தியா வந்து சேரும் எனத் தகவல் தெரிவித்தனர், என கூறியுள்ளார்.



Tags : Central Foreign Office ,Russia ,Tamil Nadu ,home , Russia, Tamil Nadu Students, Bodies, Homeland, Central Foreign Office
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...