×

கொரோனா ஊரடங்கு நீடிப்பதால் திருமண மண்டபங்கள் எப்போது களைகட்டும்?...!! கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க கோரிக்கை..!!!

சென்னை:  கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ள திருமண மண்டபங்களை கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பலகட்ட ஊரடங்குகள், பல்வேறு தளர்வுகளுடனும், கட்டுப்பாடுகளுடனும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து நாடு முழுவதும் பொருளாதாரரீதியாக பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் 7ம் கட்ட ஊரடங்கானது ஆகஸ்ட் மாதம் முழுவதும் அமலில் இருக்குமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ள. இதன் தொடர்ச்சியாக உடற்பயிற்சி மற்றும் யோகா நிலையங்களை திறக்க அனுமதி அளித்துள்ளன. இதனையடுத்து திருமண மண்டபங்களுக்கும் கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி அளிக்குமாறு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமணம் போன்ற வைபவங்களால் களைகட்டிய மண்டபங்கள் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக வெறிசோடி காணப்படுகிறது. கொரோனா அச்சம் காரணமாக மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்த தடைவிதிக்கப்பட்டிருப்பதால், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் முன்பதிவு செய்தவர்களுக்கும் பணத்தை திரும்பசெலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்ந்து, மண்டபம் கட்டுவதற்காக வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியவில்லை எனவும் மண்டபத்தில் பணிபுரியும் வேலையாட்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை எனவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இதனை நம்பியுள்ள மேடை அலங்காரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தொழில்கள் முடங்கிவிட்டன. இதனால் திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கி கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்பது திருமண மண்டப உரிமையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : wedding halls , wedding halls,corona curfew ,!
× RELATED கல்யாண மண்டபம், ஓட்டல்கள்,...