வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு தற்போதுள்ள நடைமுறைப்படியே இ-பாஸ் வழங்கப்படும்: தமிழக அரசு விளக்கம்

சென்னை: வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு தற்போதுள்ள நடைமுறைப்படியே இ-பாஸ் வழங்கப்படும் என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் அந்தந்த மாவட்ட கலெக்டர் மூலம் அனுமதி பெறவேண்டும் என்ற இ-பாஸ் செயல்முறை இந்தியா முழுவதும் மத்திய அரசால் நீக்கப்பட்டுவிட்டது. ஆனால் தமிழ்நாட்டில் தொடரும் இந்த திட்டத்தால் பொதுமக்களுக்கு காலதாமதம், இடையூறுகள், வீண் மன அழுத்தம் போன்ற தேவையில்லாத சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனால் இ-பாஸ் முறையை ரத்து செய்ய பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இ-பாஸ் நடைமுறையில் தளர்வுகள் அளித்து இன்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் பயணிக்க வரும் ஆக.,17ம் தேதி முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன், தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால், இ-பாஸ் அனுமதி எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களுக்கு மட்டுமே என்றும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இது பொருந்தாது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதனை தொடர்ந்து வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்களுக்கு இப்போது இருக்கும் இ-பாஸ் நடைமுறை விதிமுறைகள் எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Related Stories: