நீலகிரி மாவட்டம் கூடலூரில் தொடர் மழையால் உருவான புதிய அருவிகள்...!!! ரம்மியமான இயற்கை காட்சியை ரசிக்க சுற்றுலா பயணிகள் இல்லை!!

நீலகிரி:  நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக சாலையோரங்களில் புதிதாக அருவிகள் உருவாகி ரம்மியமாக காட்சியளிக்கிறது. நீலகிரியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்த கனமழையால் வறண்டு கிடந்த அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனைத்தொடர்ந்து, கனமழையால் அணைகள், ஏரிகள், குளங்கள், விளைநிலங்கள் என அனைத்தும் வெள்ளக்காடாக மாறின. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு, மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்புகள், மின்சாரம் துண்டிப்பு என பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டன.

இருப்பினும் மற்றொரு புறம் புதிய புதிய அருவிகள், காட்டாறுகள் புத்துயிர் பெற்றுள்ளன. இதனையடுத்து உதகை, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலையோரங்களில் பல்வேறு இடங்களில் நீரோடைகள், அருவிகள் புதிதாக தோன்றியுள்ளன. இவை பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கின்றன. அதைபோல், கூலூர் நகர், ஊசிமலை, முதுமலை வனப்பகுதிகள் என எங்கு பார்த்தாலும், பசுமை நிறைந்து காட்சியளிக்கின்றன.

இதனைத்தொடர்ந்து, மலைமுகடுகளில் மேகக்கூட்டங்கள்  தவழ்ந்து செல்வது கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ரம்மியமான இயற்கை காட்சிகளை ரசிக்க யாருமில்லை என்பதுதான் மனதிற்கு வருத்தமளிப்பதாக உள்ளது.

Related Stories: