×

கள்ளக்குறிச்சி அருகே தலைதூக்கும் கட்டப்பஞ்சாயத்து...!! கொலை மிரட்டல் விடுக்கப்படுவதால் ஊருக்குள் வசிக்க பொதுமக்கள் அச்சம்..!!

கள்ளக்குறிச்சி:  கள்ளக்குறிச்சி அருகே ஒரு குடும்பமே கட்டப்பஞ்சாயத்தால் 3 ஆண்டுகளாக ஒதுக்கி வைக்கப்பட்ட கொடுமை அரங்கேறியுள்ளது. அன்றைய காலகட்டத்தில் கட்டப்பஞ்சாயத்துகள் கிராம புறங்களில் அதிகளவில் நடைபெற்று வந்தன. ஏனெனில் காவல் நிலையங்கள் குறைந்தளவு இருப்பதால் இதுபோன்ற வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தன. இந்த நிலையில் தற்போதுள்ள காலகட்டத்திலும் ஒரு சில கிராமங்களில் தொடர்ந்து கட்டப்பஞ்சாயத்துகள் நடைபெற்று வருகின்றன.

இதனால் பல குடும்பங்கள் சிதைந்து, உறவினர்களை பிரிந்து, தனிமையில் வாழ்ந்து மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது, கள்ளக்குறிச்சி அருகே ஒரு கிராமத்தில் கட்டப்பஞ்சாயத்தால் ஒரு குடும்பம் அவதிப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்துள்ள சவேரியார் பாலத்தை சேர்ந்த ஜேக்கப் என்பவர், வீடுகட்ட பொது இடத்திலிருந்து மணல் எடுத்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில், கட்டப்பஞ்சாயத்தால் ஊரை விட்டு ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளார்.

இதனால் கடந்த 3 ஆண்டுகளாக தங்களது உறவினர்களுடன் பேசமுடியாமலும், கடைகளுக்கு செல்ல முடியாமலும் பெரிதும் அவதிப்படுவதாக ஜேக்கப் குடும்பத்தினர் கண்ணீர்மல்க கூறுகின்றனர். மேலும் ஊருக்குள் யாரும் தங்களுக்கு வேலை தர மறுப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் திருக்கோவிலூர் டி.எஸ்.பியிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த ஜேக்கப் குடும்பத்தினர், கடந்த 3ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்பதுதான் உச்சகட்ட வேதனையாக இருக்கிறது.

Tags : Kallakurichi ,public ,city , panchayat ,Kallakurichi,Public fear,
× RELATED நாயின் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பா: தீயணைப்பு வீரர்கள் அகற்றினர்