சுதந்திர தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு: பாம்பன் பாலத்தில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு

ராமேஸ்வரம்: சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டின் கடலோர பகுதிகளிலும், முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம், தனுஷ்கோடி மற்றும் பாம்பன் கடல் பகுதியில் இந்திய கடற்படையினர், கடலோர காவல் படையினர் இரவு பகலாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மரைன் போலீசாரும் கடலோர பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.பாம்பன் ரயில் பாலத்தில் நேற்று மதியம் முதல் ஆயுதம் ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். பயணிகள் ரயில் இயக்கப்படாத நிலையிலும் ரயில்வே போலீசார் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரயில் பாலத்தில் ஊழியர்கள் தவிர மீனவர்கள், பொதுமக்கள் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமநாத சுவாமி கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படாத நிலையில், வழக்கமான போலீசாருடன் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அக்னி தீர்த்த கடற்கரை, தனுஷ்கோடி, மண்டபம் கடலோர பகுதிகளிலும் போலீசாரும், புலனாய்வு துறையினரும் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: