சிதம்பரம் அருகே தனி தீவான கிராமம் வெள்ள காலத்தில் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டால் கிராமமே மூழ்கும் அபாயம்

சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள ஜெயங்கொண்டபட்டினம் கிராமம் புதிய கொள்ளிடம் ஆறு மற்றும் பழைய கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையில் தனி தீவாக அமைந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றில் கடந்த ஆண்டு காவிரியில் உபரி நீர் திறந்து விடப்பட்டபோது இக்கிராமம் பெருமளவில் பாதிக்கப்பட்டது.  ஆற்றின் கரை உடைந்து வெள்ளம் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து பொதுப்பணித்துறை அலுவலர்கள் தற்காலிகமாக பனைமரம், மணல் மூட்டை மூலம் தடுப்புகள் அமைத்தனர். தற்போது கர்நாடக மாநிலத்தில் அதிக மழை பெய்வதால் மேட்டூர் அணை நிரம்பி மீண்டும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் உள்ளது. அப்போது இந்த இடத்தில் தடுப்புக் கட்டைகள் உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்து கிராமமே மூழ்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

அதனால் உடனடியாக போர்க்கால அடிப்படையில் இந்த கிராமத்தில் ஆற்றின் கரை உடையாமல் தடுக்க தடுப்புச் சுவர் கட்டித் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து முன்னாள் ஊராட்சி தலைவர் கோவி. மணிவண்ணன் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றை ஒட்டி இந்த கிராமம் இருப்பதால் பல ஆண்டுகளாக மண் அரிப்பு ஏற்பட்டு கரை உடையாமல் இருக்க தடுப்புச் சுவர் கேட்டு அரசுக்கு பலமுறை கோரிக்கைகளை வைத்துள்ளோம். ஆனால் இதுவரை தடுப்புச்சுவர் கட்டவில்லை. அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு தடுப்புச் சுவர் கட்டி தர வேண்டும் என்றார்.

Related Stories: