கொரோனா தொற்று பரவும் அபாயம் பொது இடங்களில் மாஸ்க் வீசினால் வழக்கு-அபராதம் : அதிகாரிகள் எச்சரிக்கை

வேலூர்: கொரோனா வைரஸ் பரவி வருவதால், மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், அனைவரும் மாஸ்க் அணிந்து செல்கின்றனர். ெதாடர்ந்து இந்த மாஸ்க்குகளை முறையாக அப்புறப்படுத்தாமல் பொது இடங்களில் வீசப்படுகிறது. இதனால், கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட விலங்குகளுக்கும் கொரோனா பரவும். எனவே பொது இடங்களில் மாஸ்க்குகள் வீசுவதை தவிர்க்க வேண்டும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து வேலூர் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து மாஸ்க் உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் பிரித்து எடுக்கப்படுகிறது. இந்த மாஸ்க்குகள் தீயிட்டு எரிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் மாஸ்க்குகளை தனியாக சேகரித்து கொடுத்தால், துப்புரவு பணியாளர்கள் எளிதில் கையாள முடியும். அதேபோல் பொது இடங்களில் மாஸ்க்குகள் வீசுவதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்புவது, மாஸ்க் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை வீசுவது ஆகியவற்றுக்கு நோய் தொற்று பரப்பும் குற்றங்களின் கீழ் அபராதம் விதிக்க முடியும். தீவிர நோய்களை பரப்பும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசில் புகார் கொடுத்தும் வழக்குப்பதிவு செய்ய முடியும். கொரோனா பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை மட்டுமின்றி பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவசியம்’ என்றனர்.

மருத்துவ கழிவால் 33 சதவீதம் தொற்று

தினமும் புதிய நோய் கிருமிகள் உருவாகி வருகிறது. கொரோனா போன்ற நோய் பாதிப்புகளை குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நோயை பரவாமல் கட்டுப்படுத்த வேண்டியதும் அவசியம். இந்நிலையில் தூக்கி வீசப்படும் மருத்துவ கழிவுகளில் இருந்து தொற்று கிருமிகள் காற்றில் பரவுகிறது. மனிதர்களுக்கு மருந்து செலுத்த பயன்படுத்தப்படும் ஊசியில் இருந்து 33 சதவீதமாக பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, மருத்துவ கழிவுகள் கையாளுவதற்கான திட்டம் கடந்த 2008ம் ஆண்டு தமிழக அரசால் கொண்டு வரப்பட்டது. இதில் உள்ள விதிமுறைகளை கடைபிடித்தால் காற்றில் பரவும் காசநோய் போன்ற நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். எனவே, மருத்துவ கழிவுகளை கையாளுவதற்கான விதிமுறைகள் தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Related Stories: