×

தென்மேற்கு பருவமழையால் கொப்பரை உற்பத்தி பாதிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் தென்மேற்கு பருவமழை எதிரொலியால் கொப்பரை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் தென்னை விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. பொள்ளாச்சி, ஆனைமலை, ஆழியார், கோட்டூர், கோமங்கலம், நெகமம், கிணத்துக்கடவு, வடக்கிபாளையம், கோபாலபுரம், கஞ்சம்பட்டி, ராமபட்டிணம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் தென்னை விவசாயம் அதிகளவில் நடப்பதால் இப்பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட கொப்பரை உலர்கலன்கள் உள்ளன. வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் போது உலர்கலன்களில் தொடர்ந்து கொப்பரை உலர வைக்கும் பணி நடக்கிறது. இந்தாண்டில் கடந்த 6 மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், களங்களில் கொப்பரை உலரவைக்கும் பணி தொடர்ந்திருந்தது.

வெளி மார்க்கெட்டில் விலை ஏற்றம், இறக்கத்தை பொருத்து விசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்தது.   இந்நிலையில், பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக பருவமழை தொடர்ந்து பெய்ததால், கலன்களில் கொப்பரை உலர வைக்கும் பணி பாதிக்கப்பட்டது. இரவு மற்றும் பகல் என தொடர்ந்து மழைப்பொழிவு இருந்ததால், களங்களில் கொப்பரையை உலரவைக்க முடியாமல் போனது. கடந்த இரண்டு நாட்களாக பகல் நேரத்தில் லேசான வெயிலின் தாக்கம் இருந்தாலும் திடீர் என பெய்யும் மழையால் கொப்பரை உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்படுவதாகவும், தற்போது பருவமழை மட்டுமின்றி, கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டால் வெளியூர்களுக்கு கொப்பரை அனுப்பும் பணி மிகவும் மந்தமாகி உள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Tags : Impact , copra production , southwest monsoon
× RELATED தென்மேற்கு பருவ மழையால் தேவம்பாடி குளத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு