×

உயரழுத்த மின்சாரம் பயன்படுத்தும் ஆலைகளுக்கு குறைந்தபட்ச மின்கட்டணம் வசூலிக்க, மின்வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

சென்னை:  உயரழுத்த மின்சாரம் பயன்படுத்தும் ஆலைகளுக்கு குறைந்தபட்ச மின்கட்டணம் வசூலிக்க வேண்டுமென்று மின்வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே ஊரடங்கு காலத்தில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடிய மின்கட்டண கணக்கீடு முறையை, எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைகள் சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

அதாவது உயரழுத்த மின்சாரம் பயன்படுத்தக்கூடிய தொழிற்சாலைகள் சார்பில் இந்த வழக்கானது தொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, கொரோனா ஊரடங்கு காரணமாக 3 மாதத்திற்கும் மேலாக தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்ததாகவும், இதனால் தொழிலாளர்கள் யாரும் பணியில் ஈடுபடவில்லை எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதன் காரணமாக, தங்களால் உரிய மின் கட்டணத்தை செலுத்த முடியாது என தொழிற்சாலை நிர்வாகிகள் மனுவில் சுட்டி காட்டியுள்ளனர்.

ஆனால் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அதிகபட்சமாக உயர் மின் கட்டணத்தை செலுத்த வேண்டுமென்று தங்களை நிர்பந்திப்பதாகவும், எனவே அதற்கு தடைவித்திக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து குறைந்தபட்ச மின் கட்டணமாக 20 சதவீதம் மின் கட்டணத்தை செலுத்த உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கானது தற்போது உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந் வெங்கடேசன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து வழக்கினை விசாரித்த நீதிபதி, ஊரடங்கு காலம் முடியும் வரை குறைந்தபட்ச மின் கட்டணமான 20 சதவீத மின் கட்டணத்தை செலுத்தலாம் என உத்தரவிட்டுள்ளார். மேலும் தொழிற்சாலைகள் ஏதேனும், எற்கனவே முழு கட்டணத்தை செலுத்தி இருந்தால், வரும் காலங்களில் அந்த மின் கட்டணமானது சரி செய்யப்பட வேண்டும் எனவும் மின்வாரியத்திற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, தொழிற்சாலைகளுக்கு மட்டுமே இந்த உத்தரவானது பொருந்தும் என்றும், அங்கு செயல்பட்டு வரும் நிர்வாக அலுவலகங்களுக்கு இவை பொருந்தாது எனவும் நீதிபதி ஆனந் வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.

Tags : power plants ,Chennai High Court ,Electricity Board ,power utility , Chennai High Court ,utility , minimum electricity tariff , high voltage power plants
× RELATED ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்கள்...