கரூர் பசுபதிபாளையம் அமராவதி ஆற்றில் நீரோட்டத்திற்கு தடையாக இருந்த ஆகாய தாமரை செடிகள் அகற்றம்: பொதுமக்களே களத்தில் இறங்கினர்

கரூர்: அமராவதி ஆற்றில் தண்ணீரின் போக்கிற்கு தடையாக இருந்த ஆகாயதாமரை செடிகளை இந்த பகுதியினரே களத்தில் இறங்கி அகற்றினர். அமராவதி ஆற்றில் தற்போது பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் இரவு கரூர் நகரை தாண்டி திருமுக்கூடலூர் நோக்கி சென்றது. இதில் கரூர் நகரின் வழியாக பசுபதிபாளையம் அருகே அமராவதி ஆறு செல்கிறது. இந்த ஆற்றுப்பகுதியில் அதிகளவு ஆகாய தாமரை செடிகள் வளர்ந்துள்ளன.

ஆற்று நீரின் போக்கை மாற்றும் தன்மை கொண்ட இந்த ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் ஏற்கனவே, கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், அகற்றப்படவில்லை. இந்நிலையில் நேற்று பசுபதிபாளையம் அமராவதி ஆற்றில் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தாங்களாகவே ஆற்றில் இறங்கி, நீரின் போக்கை மாற்றிய ஆகாய தாமரை செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும், அகற்றும் பணியில் ஈடுபட்ட போது, பாம்பு போன்ற விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் இருந்ததால் பீதிகளுக்கு இடையே இந்த பணியில் மக்கள் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: