திருமலை நாயக்கர் மகாலில் பறவைகள் நுழைவதை தடுக்க நைலான் வலை

மதுரை:  மதுரை திருமலை நாயக்கர் மகாலில், ஆசிய வளர்ச்சி வங்கி நிதி மூலம் ரூ.3 கோடியில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மகாலின் திறந்தவெளியான முற்றத்து தாழ்வாரங்களில் புறா உள்ளிட்ட பறவைகள் மகாலுக்குள் நுழைந்து எச்சமிடுவதை தவிர்க்க, ரூ.11 லட்சம் செலவில் ‘நைலான் வலை’ பொருத்தப்பட்டுள்ளது.  இது குறித்து மகால் இன்ஜினியர் ஒளிமாலீக் கூறுகையில், ‘‘மகால் சீரமைப்பு பணி கடந்த அக்டோபர் முதல் நடந்து வருகிறது. ரூ.3 கோடியில் மேல்தளத்தில் தட்டோடு பதித்தல், பழமை மாறாமல் சுண்ணாம்பு, முட்டையின் வெண்கரு உள்ளிட்டவைகள் கலந்து தூண்கள் போன்றவை சீரமைப்பு, வண்ணப்பூச்சு என பணி தொடர்ந்து நடந்து வருகிறது. செப்டம்பருக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 மகாலுக்குள் புறாக்கள் உள்ளிட்ட பறவைகள் வலம் வந்து எச்சமிடுவதால் அழகு கெட்டு வந்தது.  இதை தடுக்க ஜன்னல் பாதைகளில் கம்பி வலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மகாலின் திறந்தவெளி முற்றத்து தாழ்வாரம் வழியாகவே பறவைகள் அதிகம் வந்து எச்சமிடுவதால், ரூ.11 லட்சத்தில் நைலான் வலை பொருத்தப்பட்டுள்ளது. தொல்லியல் கட்டிடம் பாதிக்காத வகையில், அதிக கனமில்லாத, திறன்மிக்க வகையில் இந்த நைலான் வலையை பொருத்தியுள்ளோம். இதன்மூலம் மகாலின் தோற்றத்திற்கும் பாதிப்பு இருக்காது’’ என்றார்.

Related Stories:

>