×

நாகர்கோவிலில் அரசு உத்தரவை மீறி மாணவர் சேர்க்கை!: பெற்றோர்கள் அதிகளவில் குவிந்ததால் கொரோனா பரவும் அபாயம்..!!

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் அரசு உத்தரவை மீறி மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளியில் ஏராளமான பெற்றோர் மற்றும் மாணவர்கள் குவிந்ததால் கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொடிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வைரசுக்கு 115 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, பள்ளிகள் திறப்பது குறித்து அரசு ஒரு தெளிவான முடிவெடுக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் நாகர்கோவிலில் உள்ள சென் ஜோசப் கான்வென்ட் என்ற தனியார் பள்ளியில் 6ம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பள்ளியில் மாணவ, மாணவியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் அதிகளவில் கூடியுள்ளனர். சமூக இடைவெளி என்பது துளியும் கடைபிடிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் நோய் தொற்று அபாயம் பெருமளவில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற திங்கட்கிழமையில் இருந்து தான் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று அரசு கூறியுள்ளதாக குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் இந்த தனியார் பள்ளியில் அரசு விதிமுறைகளை மீறி மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனியார் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடத்த யார் அனுமதித்தார்கள் என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே  உள்ளது.

Tags : Corona ,Nagercoil ,parents ,overcrowding , Student admission , Nagercoil ,violation of government order , Corona risk ,
× RELATED நாகர்கோவிலில் சுற்றி திரிந்த 13 நாய்களுக்கு கருத்தடை