×

பக்தர்கள் அனுமதியின்றி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் பங்குனி தேர் திருவிழா துவக்கம்

ஸ்ரீரங்கம்: திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பிறப்பித்த உத்தரவின் காரணமாக பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ரங்கம் ரெங்கநாதர் கோயிலில் கடந்த மார்ச் 25-ஆம் தேதியில் இருந்து நடை சாத்தப்பட்டு உள்ளது. கோவிலில் நித்தியப்படி கால பூஜைகள் மற்றும் நடத்தப்பட்டு வருகின்றன. பக்தர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. இதனால் எந்த ஒரு திருவிழாக்களும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதற்கான பரிகார பூஜை கடந்த 10-ந்தேதி நடந்தது. இதனால் மீண்டும் பிரம்மோற்சவங்களை நடத்திட வேண்டும் என ஆகமத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்பேரில் விடுபட்ட திருவிழாவான ஆதி பிரம்மோற்சவம் (பங்குனி தேர் திருவிழா) நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 22ம்தேதி வரை 10 நாட்கள் பக்தர்கள் அனுமதியின்றி கோயில் வளாகத்தில் நடைபெறுகிறது.

அதன்படி நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்திற்கு வந்தடைந்தார். பின்னர் சிறப்பு பூஜைகளுடன் காலை 4.15 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து மாலை 4 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு மாலை 4.15 மணிக்கு கருட மண்டபம் சென்றடைந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு யாகசாலை சென்றடைந்தார். அங்கு திருமஞ்சனம் கண்டருளி இரவு 10.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். இதேபோன்று நம்பெருமாள் தினமும் கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு கருட மண்டபத்தில் வாகனங்களில் எழுந்தருளுவார். அதன்படி 16-ந்தேதி நம்பெருமாள் தங்க கருடவாகனம், சேஷவாகனம், கற்பவிருட்ச வாகனங்களில் எழுந்தருளுகிறார். 18ந் தேதி மாலை 5 மணிக்கு உறையூர் தாயார் மற்றும் வெளிஆண்டாள் மாலை சமர்ப்பித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 19ம்தேதி இரவு 9.30 மணிக்கு தாயார் சன்னதியில் நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளி கண்ணாடி அறை சென்றடைகிறார். 20ம்தேதி மாலை குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார்.

21ம் தேதி காலை 6மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு சமாதானம் கண்டருளி காலை 8 மணிக்கு தாயார் சன்னதி முன்மண்டபம் சென்றடைகிறார். காலை 10.15 மணி முதல் மதியம் 1 மணிவரை நம்பெருமாள், தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது. சேர்த்தி சேவைக்கு பின் நம்பெருமாள் கோரதத்தில் (தேரில்) எழுந்தருளுவது வழக்கம். ஆனால் தடை உத்தரவின் காரணமாக நம்பெருமாள் கோரத்திற்கு பதிலாக இரவு 8 மணிக்கு கருடமண்டபத்தில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார். 22-ம்தேதி மாலை 4 மணிமுதல் மாலை 6 மணிவரை சந்தனு மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளுகிறார். அங்கிருந்து நம்பெருமாள் புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.Tags : Srirangam Renganathar Temple ,Panguni Chariot Festival ,devotees , Panguni Chariot Festival,Srirangam Renganathar Temple,without, permission ,devotees
× RELATED விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்காமல்...