×

கடவுளுக்கே தடைபோடுவதா ?.. விநாயகர் சிலைகளை நிறுவி, சமூக இடைவெளியோடு மக்கள் தரிசிக்க அனுமதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்!!

சென்னை : தடைகளை தகர்க்கும் கடவுளுக்கே தடை போடுவது வேதனையளிக்கிறது என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதியளிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆங்காங்கே, பொது இடங்களில்,  காவல்துறை அனுமதியோடு, விநாயகர் சிலைகளை நிறுவி மக்கள் வழிபடுவது, கடந்த 40 ஆண்டு காலமாக தமிழகத்தில்  வழக்கத்தில் இருந்து வருகிறது.பின்னர் அந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று, ஆங்காங்கே கடல் , ஏரி, குளங்களில் கரைப்பார்கள்.  இந்த ஆண்டு கொரோனா  பரவலைக் கருத்தில் கொண்டு,   விநாயகர் ஊர்வலத்தை நாங்களே கைவிடுகிறோம், விநாயகர் சிலைகளை நிறுவி வழக்கம் போல் வழிபட அனுமதிக்க வேண்டும்  என்று இந்து அமைப்புகள் தமிழக தலைமைச் செயலாளர் அவர்களை சந்தித்த போது தெரிவித்துள்ளார்கள்.  அத்துடன் வழிபாட்டிற்கான பணிகளையும் தொடங்கியுள்ளார்கள்.

 ஆனால் நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கும் சேர்த்து தடைவிதிக்கப்பட்டுள்ளது.  ஊரடங்கு தளர்வுகளால் மக்கள் பல்வேறு பணிகளுக்காக  வீட்டை விட்டு வெளியே வந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் . மாநில அரசு சிறு கோயில்களை எல்லாம் திறந்து கடவுளை வழிபடுவதற்கு அனுமதி அளித்துள்ளது. இத்தகைய நிலையில் விநாயகர் சிலை நிறுவி வழிபடுவதற்கு மட்டும் தடை என்பதை நீக்க வேண்டும்.

 இந்து மக்கள் அவரவர் குடும்பம் மற்றும் தொழில்களில் ஏற்படும் தடைகள்  நீங்கிட விநாயகரைத் தான் வணங்குவார்கள். அதனால்தான் எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் முதலில்  பிள்ளையார் வைத்து கும்பிடுவது வழக்கமான ஒன்றாகும்.  இப்போது தமிழக அரசு தடைகளை தகர்க்கும் கடவுளுக்கே தடைபோடுவது வேதனை அளிக்கக்கூடியது. எனவே 1983 க்கு  முன்பிருந்தே நடைபெறும் விநாயகர் சதுர்த்தி கால சிறப்பு வழிபாட்டை தமிழ்நாடு அரசு அனுமதிப்பது குறித்து ,மீண்டும் பரிசீலிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் சமூக இடைவெளியோடு , விழிப்புணர்வோடு விநாயகரை வணங்குவார்கள் என்பது உறுதி. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : L. Murugan ,God ,BJP ,Ganesha ,idols , God forbid? .. Ganesha idols should be installed and people should be allowed to visit with social gap: BJP leader L. Murugan !!
× RELATED ஊட்டியில் ஒரே நேரத்தில்...