அரசியல் சாசனத்தின் 8வது அட்டவணையில் உள்ள பிராந்திய மொழிகளை இந்தியாவின் அலுவல் மொழியாக்கலாம்: உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: இந்தி மற்றும் ஆங்கிலத்தை தவிர அரசியலமைப்பின் 8வது பட்டியலில் இடம்பெற்றுள்ள பிராந்திய மொழிகளை இந்தியாவின் அலுவல் மொழியாக அறிவிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பட்டியல் மொழிகளுக்கு மத்திய அரசின் அங்கீகாரம் இருந்தாலும், அனைத்து அலுவல் தொடர்புகள் மற்றும் விதிமுறைகள், அறிக்கைகள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலத்திலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கையில் வரைவை 22 பட்டியல் மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்ற டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து மத்திய அரசு தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி தெரியாமல் இருக்கலாம் என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, மத்திய அரசு அவர்களுடன் உள்ளூர் மொழிகளில் தொடர்பு  கொள்வது, இந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறினார்.

இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி, இந்தியாவின் அலுவல் மொழிகள் இந்தி மற்றும் ஆங்கிலம் என மத்திய அரசு வழக்கறிஞர் சுட்டிக்காட்டிய போது, அவர் இந்த கருத்தை தெரிவித்தார். மேலும் உச்சநீதிமன்றத்தில் எழுப்பப்பட்ட வாதங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் எழுப்பப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மத்திய அரசின் மேல்முறையீட்டை திரும்பப்பெற உத்தரவிட்டு, தேவையானால் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுக அனுமதி அளித்து உத்தரவிட்டனர். அரசியல் சாசனத்தின் 8வது அட்டவணையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 22 மொழிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: