ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக 8000 வீடுகளை இடிக்க நடவடிக்கை...!! அதிகாரிகளை முற்றுகையிட்டு தஞ்சையில் நீடிக்கும் போராட்டத்தால் பரபரப்பு...!!

தஞ்சை:  தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக 8 ஆயிரம் வீடுகளை இடிக்க, அதிகாரிகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் தொடர் போராட்டத்தில்  ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதவாது 903 கோடி 70 லட்சம் ரூபாய் செலவில் தற்போது இந்த ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே கொடிமரத்துமூலை, கீழலங்கம், வடக்கலங்கம் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வந்த கரகாட்ட கலைஞர்கள், நாட்டுப்புற கலைஞர்களின் வீடுகள் அப்புறப்படுத்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் அங்குள்ள மக்களை மாநகராட்சி அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் இணைந்து வல்லம் பகுதியில் குடியமர்த்தினர். இந்த நிலையில் தற்போது ஸ்மார்ட் சிட்டி விரிவாக்க பணிகளுக்காக வடக்கு அலங்கம், மேல அலங்கம், செக்கடி, கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கக்கூடிய 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளை அகற்றுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள், இன்று வீடுகளில் நம்பர் ஓட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் தற்போது பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவரும் இந்த பகுதியில் பரம்பரை பரம்பரையாக சுமார் 200க்கும் மேற்பட்ட ஆண்டுகள் வசித்து வருவதாக கூறியுள்ளனர். மேலும் பள்ளிகள், கடைகள், மருத்துவமனைகள் என அனைத்து வசதிகளும் இந்த பகுதியில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் வீடுகளை இடிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என பொதுமக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இதனையடுத்து அதிகாரிகள் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி வீடுகளுக்கு நம்பர் ஒட்டியதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தற்போது போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சார்பில் சமாதான பேச்சுவாரத்தையானது நடைபெற்று வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்த பகுதியில் 20க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மக்கள் அதிகளவில் ஒரே இடத்தில் கூடி இருப்பதால் மேலும் தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: