மீண்டும் அதன் வேலையை காட்டிய தங்க விலை : சவரன் ரூ. 280 அதிகரித்து ரூ.40,888-க்கு விற்பனை!!

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக பொருளாதார வீழ்ச்சியின் தொடர்ச்சியாக தங்கத்தில் முதலீடு உலக அளவில் அதிகரித்தது. இதனால், தேவை அதிகரித்து தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது. அதுவும் ஜெட் வேகத்தில் தங்கம் விலை உயர்ந்து கொண்டே போனது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதற்கு முந்தைய நாளான மார்ச் 23ம் தேதி முதல் கடந்த 7ம் தேதி வரை கிராமுக்கு ரூ.1,464க்கும், சவரனுக்கு ரூ.11,712 உயர்ந்தது.

கடந்த 7ம் தேதி ஒரு கிராம் ரூ.5,416க்கும் சவரன் ரூ.43,328க்கும் விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற சாதனையை படைத்தது. இப்படியே விலை உயர்ந்தால் தங்கம் சவரன் ரூ.50,000ஐ கடக்கும் என்றும் கணிக்கப்பட்டது. இந்த விலை ஏற்றம் நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் கடந்த 8ம் தேதி முதல் தங்கம் விலை குறைய தொடங்கி உள்ளது. கடந்த 8ம் தேதி ஒரு சவரன் ரூ.43,080, 10ம் தேதி ரூ.42,920, 11ம் தேதி ரூ.41,936க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.5,104க்கும், சவரன் ரூ.40,832க்கும் விற்கப்பட்டது.

நேற்றும் 5வது நாளாக தங்கம் விலை குறைந்தது. கிராமுக்கு ₹28 குறைந்து ஒரு கிராம் ரூ.5076க்கும், சவரனுக்கு ரூ.224 குறைந்து ஒரு சவரன் ரூ.40,608க்கும் விற்கப்பட்டது. கடந்த 5 நாட்களில் மட்டும் சவரன் ரூ.2740 அளவுக்கு குறைந்துள்ளது. கிடு,கிடுவென உயர்ந்து வந்த தங்கம் விலை சற்று குறைந்து வருவது நகை வாங்குவோரை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. ஆவணி மாதத்தில் அதிக அளவில் திருமணம் உள்ளிட்ட விஷேச தினங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த நேரத்தில் தங்கம் விலை குறைந்து வருவது மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மீண்டும் தங்க விலை அதன் வேலையை காட்டியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.5,111-க்கும் சவரன் ரூ.40,888-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ரூ.76.7க்கு விற்பனை ஆகிறது.

Related Stories: